தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான மொய்தாய் குத்துச்சண்டை போட்டியில் ஈரோடு வீரர் மகேந்திரகுமார் பங்கேற்கிறார். ‘தி இந்து’ செய்தி எதிரொலியாக கிடைத்த நிதி உதவியால் இந்த பயணம் சாத்தியமானதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஈரோட்டைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியின் மகனான மகேந்திர குமார், தாய்லாந்தின் தேசிய விளையாட்டான ‘தாய் பாக்சிங்’ குத்துச்சண்டை பயிற்சியை மேற் கொண்டு, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங் களைக் குவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, தென் கொரியாவில் நடந்த ஆசிய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்ற மகேந்திரகுமார், போதிய நிதி வசதி இல்லாததால் அதில் பங்கேற்க முடியாமல் போனது.
இந்த நிலையில் 2013ம் ஆண்டு நடைபெற்ற தேசிய மொய்தாய் குத்துசண்டை போட்டியில் மீண்டும் தங்கம் வென்றார். இதன் மூலம் வரும் 12-ம்தேதி முதல் 24-ம்தேதிவரை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு மகேந்திரகுமாருக்கு கிடைத்துள்ளது.
இது தொடர்பாக ‘தி இந்து’ செய்தியாளரிடம் மகேந்திர குமார் கூறியது: சர்வதேச போட்டிகளில் பங்கேற்க கிடைத்த இரண்டாவது வாய்ப்பும் நழுவி விடுமோ என்ற அச்சத்துடன் இருந்தேன். ‘தி இந்து’வில் எனது நிலை குறித்து வெளியான செய்தியில், எனது செல்போன் எண்ணையும் தெரிவித்து இருந்ததால், ஏராளமானவர்கள் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். யாரும் எனக்கு உதவவில்லையே என்ற ஏக்கத்துடன் இருந்த எனக்கு அவர்களின் பாராட்டு மழையும், ஊக்கமும் நெகிழ்ச்சியடையச் செய்தது.
பாங்காக் சென்று வர எவ்வளவு செலவாகும் என்று அக்கறையோடு பலரும் விசாரித்தனர். ஈரோடு யு.ஆர்.சி., நிறுவனத்தினர் என்னை நேரில் அழைத்து பாராட்டினர். பாங்காக் போட்டியில் பங்கேற்பதற்கு பெரும் தொகையை கொடுத்து வெற்றியோடு திரும்பி வருமாறு என்னை வாழ்த்தி அனுப்பினர். ஈரோடு காந்தி ஆசிரமத்தினரும் உதவியிருக்கிறார்கள்.
சென்னையைச் சேர்ந்த விளையாட்டு மனநோக்கு பயிற்சியாளர் கிருஷ்ணபிரசாத், அமெரிக்கவில் உள்ள அவரது சகோதரர் டாக்டர் சுந்தர் மூலமாக நிதி உதவி செய்தார். ஈரோடு மொய்தாய் குத்துசண்டை சங்க தலைவர் அபிலாஷ் ஜோசப், பயிற்சிக்கான உபகரணங்களை வாங்கி தந்தார். உதவி தலைவர் ராம்குமார் எனது உணவுக்கான செலவை ஏற்பதாகக் கூறினார்.
ஏற்கனவே, ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தொழிலதிபர் என். மகாலிங்கம், மில்கா பிஸ்கெட், இந்தியா சிமெண்ட் போன்ற நிறுவனங்கள் கொடுத்து உதவிய தொகையை கொண்டு பயணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன்.
இன்று (7ம்தேதி) சென்னை சென்று, அங்கிருந்து கொல்கத்தா செல்கிறேன். மொய்தாய் (MUAYTHAI) இந்திய கூட்டமைப்பு தலைவர் வொகன் ஜித் சாந்தம் (OKEN JEET SANDAM) தலைமையில் 10ம்தேதி பாங்காக் செல்கிறேன்; பதக்கத்தோடு திரும்பி வருவேன் என்றார்.
இந்தியாவில் இருந்து 7 பேர்
மொய்தாய் குத்துச்சண்டை போட்டியில் 126 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற் கின்றனர். இந்தியாவின் மணிப்பூர், கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த 6 பேரும், தமிழகத்தில் இருந்து மகேந்திர குமாரும் பங்கேற்கின்றனர். இந்த போட்டிகள் எடைப்பிரிவு அடிப் படையில் 14 பிரிவுகளாக பிரிக்கப்படு நடத்தப்படுகிறது. மகேந்திர குமார் 63 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கிறார்.