விளையாட்டு

இலங்கை ஆடுகளங்களுக்கு ரசிகர்களை வரவழைப்பது கடினம்: ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் வார்னர் விரக்தி

ஏஎஃப்பி

ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 3-0 எனக் கைப்பற்றியது. தற்போது இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதி வருகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 என கைப்பற்றியுள்ளது.

இந்த தொடரில் இதுரை போட்டிகள் நடைபெற்ற அனைத்து ஆடுகளங்களும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் ரன்கள் குவிக்க இயலவில்லை.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டேவிட் வார்னர் இலங்கை ஆடுகளங்கள் குறித்து குறை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இலங்கை போன்ற ஆடுகளத்தில் விளையாடும்போது அதிக அளவு ரன்கள் குவிப்பது கடினம்.

எங்களுடைய பார்வையில் ஆடுகளத்தை பொறுத்தவரையில் சிறிய ஏமாற்றம்தான். ஆக்ரோஷ மான கிரிக்கெட்டை விளையாடி ரசிகர்களை மகிழ்விக்கவே நாங்கள் விரும்புகிறோம்.

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது போட்டியில் இங்கிலாந்து அணி 444 ரன்கள் குவித்தது. கிரிக்கெட்டில் நான் என்ன விரும்புகிறேனோ அது அந்த போட்டியில் நடந்தது. இதுபோன்ற சூழ்நிலையைத்தான் நான் விரும்புகிறேன்.

இலங்கை அணிக்கு எதிரான ஐந்து போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ள ஆடுகளங்களை வைத்துக்கொண்டு ரசிகர்கள் கூட்டத்தை வரவழைப்பது மிகவும் கடினம்.

இவ்வாறு டேவிட் வார்னர் கூறினார்.

SCROLL FOR NEXT