விளையாட்டு

முதல் டி20: இங்கிலாந்து பந்துவீச்சில் இந்தியா திணறல்

கார்த்திக் கிருஷ்ணா

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில், முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 147 ரன்களை எடுத்தது. இங்கிலாந்தின் கட்டுப்பாடான பந்துவீச்சில் இந்திய வீரர்கள் 7 பேர் ஆட்டமிழந்தனர்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. கேப்டன் கோலி, ராகுலுடன் களமிறங்கினார். முதல் 4 ஓவர்களில் 33 ரன்கள் வர இந்தியா சிறப்பான துவக்கத்தைப் பெற்றது.

8 ரன்கள் எடுத்திருந்த ராகுல் ஜோர்டன் பந்தில் ஆட்டமிழந்தார். ரெய்னா களமிறங்க, அடுத்த சில ஓவர்களில் கோலி 29 ரன்களுக்கு வெளியேறினார். இதற்கு பின் ஆட வந்த யுவராஜ் சிங் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடி வந்த ரெய்னா 34 ரன்களுக்கு வீழ்ந்தார்.

தொடர்ந்து மனீஷ் பாண்டே 3, பாண்ட்யா 9 என ஆட்டமிழக்க 19 ஓவரில் இந்திய அணி 135 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

கடைசி ஓவரில் தோனி சற்று ஆறுதல் தந்தார். முதல் பந்திலும், கடைசி பந்திலும் 2 ரன்கள், நடுவில் 2 பவுண்டரி என 12 ரன்களை தோனி சேர்த்தார். 4வது பந்தில் மறுமுனையில் இருந்த ரசூல் ரன் அவுட் ஆக, இந்திய 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் என்ற நிலையில் தனது இன்னிங்ஸை முடித்தது.

சிறப்பான துவக்கத்துக்குப் பிறகு இந்தியா கண்டிப்பாக நல்ல ஸ்கோரை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்தின் பந்துவீச்சு இந்தியாவை 147 ரன்களுக்கு கட்டிப்போட்டது.

SCROLL FOR NEXT