இந்தியா-நியூஸிலாந்து டெஸ்ட் தொடர் குறித்த குழு விவாதம் தனியார் சேனல் தரப்பில் நடத்தப்பட்டது. இதில் கபில்தேவ், பிரெட் லீ, லஷ்மண் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது லஷ்மண் கூறியதாவது:
இந்திய அணிக்கு தற்போது நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. சிறந்த 3 அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து சொந்த மண்ணில் விளையாட உள்ளது. விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் அணி ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பிடிக்கும் ஆற்றல்மிக்க அணியாகும்.
அவர்கள் நீண்ட காலம் சிறந்த டெஸ்ட் அணியாக விளங்குவார்கள். கோலி இந்திய அணியை நிச்சயம் முதலிடத்துக்கு அழைத்து செல்வார். ஏனென்றால் இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் பல்வேறு வெளிநாட்டு தொடர்களில் விளையாடி உள்ளனர்.
அனைத்து சூழ்நிலைகளிலும் விளையாடி விட்டால் நல்ல அடித் தளம் பெற்று விடலாம். அந்த நிலையை தற்போது இந்திய வீரர்கள் அடைந்துள்ளனர். இந்தியா வில் விளையாடும் போது இங்குள்ள சூழ்நிலையை நன்கு அறிந்து இருப்பார்கள். அதற்கு ஏற்றார்போல் திறமைகளை வெளிப் படுத்தினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி விடுவார்கள்.
பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கடின உழைப்பாளி. அவர் பயிற்சியாளர் பதவியில் இன்னும் அதிகமான திறமையை வெளிப் படுத்துவார். அவர் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்து உள்ளார். இந்த வெற்றிப் பயணம் தொடரும் என்று நம்புகிறேன்.
நியூஸிலாந்துக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வேண்டும். தொடக்க வீரர்களாக முரளி விஜய்யும், லோகேஷ் ராகுலும், 3-வது வீரராக புஜாராவும் களம் இறங்க வேண்டும்.
விராட் கோலி மிகவும் அதிர்ஷ்ட மானவர். சூழ்நிலைக்கு தகுந்தபடி அணி சேர்க்கையை உருவாக்கும் வகையில் வீரர்களை அவர் பெற்றுள் ளார். தற்போதுள்ள வீரர்கள் இந்திய சூழ்நிலையில் மட்டும் அல்ல உலகில் உள்ள பல்வேறு பகுதி களிலும் விளையாடி கவனத்தை ஈர்த்துள்ளனர். கோலியிடம் ஒரு உத்வேகம் இருக்கிறது. அதன் மூலம் அவர் சகவீரர்களுக்கும் உத்வேகம் அளிக்கிறார். எப்போதும் வெற்றியையே எதிர்பார்க்கிறார் கோலி.
இவ்வாறு அவர் கூறினார்.
கபில்தேவ் பேசியதாவது,
‘‘தலைசிறந்த வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில் அதில் இருந்து விரைவாக மீண்ட முதல் அணி, உலகிலேயே இந்தியாவாகதான் இருக்கும். வேறு எந்த அணியும் உலகில் இந்த நிலையை எட்டவில்லை. பொதுவாக முன்னணி வீரர்கள் பலர் ஓய்வு பெற்றால் அந்த அணி வலுவுடன் திரும்ப குறைந்தது 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகும்.
கங்குலி, சச்சின், டிராவிட், லஷ்மண், சேவக், ஜாகீர்கான், தோனி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக ஓய்வு பெற்ற நிலையிலும் இந்திய அணி விரைவாக மீண்டுள்ளது. இதுபோன்று நான் வேறு எங்கும் பார்த்ததில்லை. இது ஆச்சர்யம் அளிக்கும் விஷயம்.
விராட் கோலி சூப்பர் ஸ்டாராக உள்ளார். அவர் வளருவதை பார்த்த நாங்கள், தற்போது ரோல் மாடலாக உருவாகி உள்ளதையும் பார்க்கிறோம். கோலி, தோனியிடம் இருந்து மாறுபட்டவர். கோலி ஆக்ரோஷத்தை முகத்திலேயே காட்டக்கூடியவர்.
ஒவ்வொரு கேப்டனுக்கும் தனிப்பட்ட சிந்தனைகள் இருக்கும். எல்லா ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் ஒரே வீரர் கோலி தான். அவர் சிந்தனைகள் நேர்மறையாக உள்ளது. இது இந்திய கிரிக்கெட்டுக்கு சிறப்பான விஷயம்.
அஸ்வின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக உருவெடுத்துள்ளார். அவரை தற்போது அணி அதிகம் சார்ந்துள்ளது. முக்கிய வீரரான அவர் ஆட்டத்தின் போக்கை எந்த சமயத்திலும் தனிநபராக மாற்றும் திறன் படைத்தவர்.
இவ்வாறு கபில்தேவ் கூறினார்.