விளையாட்டு

உலக குத்துச்சண்டை: சிவ தாபா, மனோஜ் தோல்வி

செய்திப்பிரிவு

கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதியில் இந்திய வீரர்கள் சிவ தாபா (56 கிலோ), மனோஜ் குமார் (64 கிலோ) ஆகியோர் தோல்வி கண்டனர்.

புதன்கிழமை நடைபெற்ற காலிறுதியில் ஆசிய சாம்பியனான சிவ தாபா 0-3 என்ற கணக்கில் அஜர்பைஜானின் ஜாவித் சலாபியேவிடமும், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவரான மனோஜ் குமார் 0-3 என்ற கணக்கில் கியூபாவின் யாஸ்நீர் லோபஸிடமும் தோல்வி கண்டனர்.

மற்றொரு இந்திய வீரரான சதீஷ் குமார் (91 கிலோவுக்கு மேற்பட்ட எடைப் பிரிவு) காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாடியபோது வலது கண் பகுதிக்கு மேல் அடிபட்டது. அதன் காரணமாக காலிறுதியில் விளையாடுவதற்கு அவர் முழு உடற்தகுதி பெறவில்லை. இதனால் அவர் போட்டியில் இருந்து விலக நேர்ந்தது. அதனால் சதீஷ் குமாரை எதிர்த்து விளையாடவிருந்த கஜகஸ்தானின் இவான் டைகோ, காலிறுதியில் களமிறங்காமலேயே அரை யிறுதிக்கு முன்னேறினார்.

போட்டி குறித்துப் பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் குர்பாக்ஸ் சிங் சாந்து, “இந்தத் தோல்வி பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும் சிவ தாபா இந்தத் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்வார் என நம்புகிறேன். மனோஜ் குமார் இந்தப் போட்டியில் தோல்வி கண்டிருந்தாலும், அவர் தன்னால் முடிந்தவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்” என்றார்.

SCROLL FOR NEXT