பிசிசிஐ சீர்த்திருத்தங்களுக்கான நீதிபதி லோதா குழுவின் பரிந்துரைகளை அமல் செய்வதன் மீதான வாதப் பிரதிவாதங்களை உச்ச நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது, பிசிசிஐ மீதான கடும் விமர்சனங்களுடன் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
கோவா கிரிக்கெட் சங்க நிர்வாகி முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டதை அடுத்து மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு நிதி ஒதுக்கும் முறை, அதனைப் பயன்படுத்தியதற்கான சான்றிதழ்கள் பெறாமை ஆகியவை மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்குர், கலிபுல்லா ஆகியோர் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட சிறப்பு ஆலோசகர் மற்றும் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் நீதிபதிகள் பார்வைக்கு கோவா கிரிக்கெட் சங்க தலைவர், செயலர், பொருளாளர் கைது செய்யப்பட்ட விவகாரத்தைக் கொண்டு வந்ததோடு, சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம், டெல்லி கிரிக்கெட் சங்க விவகாரங்களையும் எழுப்பினார். கடந்த 5 ஆண்டுகளில் கோவா கிரிக்கெட் சங்கத்துக்கு மட்டும் ரூ.141 கோடி நிதி ஒதுக்கியுள்ளது பிசிசிஐ.
கோபால் சுப்பிரமணியம் தனது விசாரணை முடிவுகளை முன்வைத்த அதே வேளையில் பிஹார் கிரிக்கெட் சங்க வழக்கறிஞர் நளினி சிதம்பரம், புதிதாக பிசிசிஐ தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனுராக் தாக்குர் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார், அதாவது அனுராக் தாக்குர் மீது 3 கிரிமினல் வழக்குகள் உள்ளன, ஆனால் பணம்படைத்த பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றார்.
இதற்கு ஆதரவாக கோபால் சுப்பிரமணியம் கூறும்போது, நீதிபதி லோதா கமிட்டி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட ஒருவர் உயர் பதவிகளில் நியமிக்கப்படுவதை மிகவும் சீரியசான விவகாரமாக அணுகியுள்ளது என்று நீதிபதிகள் பார்வைக்கு எடுத்து வைத்தார்.
இவர் மேலும் கூறும்போது, சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தில் ஓட்டுநர்கள், பணியாட்கள், குழந்தைகளும் உறுப்பினர்களாக உள்ளனர். டெல்லி கிரிக்கெட் சங்க போஸ்டல் முகவரியின் படி அது 48ச.மீ அளவு கொண்டது. ஆனால் 14 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. “48 சதுரமீட்டர் அளவில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்க முடியும். ஆனால் அந்த முகவரியில் 14 உறுப்பினர்கள் பெயர்கள் உள்ளன. மேலும் நடக்காத வேலைகளுக்காக ஒப்பந்ததாரர்களுக்கு பணம் அளித்ததாக போலி பில்களும் தயார் செய்யப்பட்டுள்ளன” என்றார். மேலும் டெல்லி ஸ்டேடியத்தில் சிறுவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்குமான இருக்கைகளே இல்லை. என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் பிறகு மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு நிதி ஒதுக்குகையில் ஏன் அதனை பயன்படுத்தியதற்கான சான்றிதழ்களைப் பெறவில்லை என்று பிசிசிஐ வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம் கேட்டனர்: “மே 10-ம் தேதி முதல் நிதியை பயன்படுத்தியதற்கான சான்றிதழ்களைக் கோருகிறீர்கள். அதற்கு முன்னால் ஏன் கோரவில்லை? இத்தனையாண்டுகளாக ஏன் தூங்கிக்கொண்டிருந்தீர்கள்? ஏன் பயன்பாட்டு சான்றிதழ்கள் பெறப்படவில்லை? நிதியை ஒதுக்கி விட்டு, வழங்கி விட்டு அதனைப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லாமல் வாரியத்தை நடத்தி வருகிறீர்கள்” என்று கடுமையாக சாடினார்.
இதற்கு வேணுகோபால் கூறும்போது, நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரைகளை ஒவ்வொன்றாக அமல்படுத்தி வருகிறது பிசிசிஐ. மேலும் குற்றசாட்டு எழுந்துள்ள வாரியங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. கோவா, பிஹார், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநில வாரியங்களுக்கு நிதி அளிப்பதை நிறுத்தியிருக்கிறோம், என்றார்.
இதற்கு நீதிபதிகள், “நிதியுதவியை நிறுத்துவது சரியான நடவடிக்கையா? ஏன் முறைகேடுகளினால் வீரர்களும், கிரிக்கெட் ஆட்டமும் பாதிக்கப்பட வேண்டும்? நிதியை நிறுத்தினால் ஆட்டம் எப்படி வளரும்? என்று கூறி இந்த வழக்கின் மீதான உத்தரவுகளை ஒத்தி வைத்தனர்.