விளையாட்டு

அழுத்தம் தரும் சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பது வார்னருக்கும் புவனேஷுக்கும் தெரியும்: லஷ்மண்

இரா.முத்துக்குமார்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் அபாரமாக ஆடிவரும் நிலையில் அழுத்தம் தரும் சூழ்நிலையை எப்படி கையாள்வது என்பது வார்னருக்கும் புவனேஷ் குமாருக்கும் தெரியும் என்று விவிஎஸ். லஷ்மண் தெரிவித்துள்ளார்.

இது குறித்து லஷ்மண் கூறியதாவது:

வார்னர், புவனேஷ் இருவரும் மேட்ச் வின்னர்கள். இவர்கள் இருவரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் போக்கையே மாற்றக்கூடியவர்கள். இருவரும் சில ஆண்டுகளாகவே சிறப்பாக ஆடிவருகின்றனர்.

இருவரும் தங்களது திறமைகளை செயல்படுத்துவதில் முதிர்ச்சி பெற்றவர்கள். சூழ்நிலைகளுக்கு ஏற்ப புரிந்து கொண்டு செயல்படுவது எப்படி என்பதையும் அதற்கேற்ப தங்கள் ஆட்டத்தை மாற்றி அமைக்கவும் தெரிந்தவர்கள்.

உதாரணமாக அன்று வார்னருக்கு ஏற்றதாக பிட்ச் இல்லை, பந்துகள் மட்டைக்கு நன்றாக வருவதையே அவர் விரும்புவார், ஆனால் அப்படி பிட்ச் இல்லை என்று தெரிந்து கொண்டு அபாரமாக தன் ஆட்டத்தை மாற்றிக் கொண்டார் (54 பந்துகளில் 70 ரன்கள்) 20 ஓவர்கள் நின்று ஆடக்கூடிய பொறுப்பு அவருக்கு ஏற்பட்டுள்ளது. வார்னர் ஒரு தலைவராகவும் பேட்ஸ்மெனாகவும் சிறப்பாக முன்னேறி வருகிறார்.

புவனேஷ் குமார் புதிய பந்தில் நன்றாக வீசக்கூடியவர், ஆனால் அவர் கடைசி ஓவர்களைக் கூட சிறப்பாக வீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றும் திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளார். பேட்ஸ்மென்களின் பலவீனத்தைப் புரிந்து கொண்டு அவ்வாறு வீசத் தெரிந்து கொண்டார். அவரை நாம் அசைத்து விட முடியாது, அவரது மன உறுதியே அவரது வளர்ச்சிக்குக் காரணம்.

அனைத்திற்கும் மேலாக இருவருமே (வார்னர், புவனேஷ்) அழுத்தம் தரும் சூழ்நிலையை எப்படி சமாளிப்பது, கையாள்வது என்பதை நன்கு அறிந்துள்ளனர்.

இவ்வாறு கூறினார் லஷ்மண்.

SCROLL FOR NEXT