தென் ஆப்பிரிக்கா தொடருக்கு இந்தியா ஏ அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள குருணால் பாண்டியா, தனது சகோதரர் ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து 2019 உலகக்கோப்பையில் ஆடுவதே தன் கனவு என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா ஏ அணிக்கு தேர்வான மகிழ்ச்சி குறித்து அவர் கூறும்போது, “இந்திய அணிக்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரு போட்டிகளில் ஆடுவதல்ல என் நோக்கம், எவ்வளவு காலம் ஆட முடியுமோ அவ்வளவு காலம் ஆட வேண்டும் என்பதே இலக்கு. 2019 உலகக்கோப்பையில் நானும் ஹர்திக்கும் இணைந்து ஆடினால் என் கனவு நனவாகும்.
இந்தியா ஏ அணிக்கு தேர்வானவுடன் ஹர்திக் ஆண்டிகுவாவிலிருந்து அழைத்தார், ‘அந்த இடத்துக்கு வந்து விட்டாய்’ என்று குதூகலக் குரலில் பேசினார். என் சகோதரனை விட எனக்கு நெருக்கமானவர் யாரும் கிடையாது, அவனிடமிருந்துதான் நான் நுணுக்கமான விஷயங்களைக் கற்றுக் கொள்கிறேன்.
இந்த ஐபில் தொடர் எனக்கு சிறப்பாக அமைந்தது, ஆனால் அடுத்த ஐபிஎல் தொடரில் என் பந்து வீச்சு பேட்டிங் இரண்டையும் எதிரணியினர் ஆய்வு செய்து விடுவார்கள். எனவே எனது பலவீனத்தைக் களைய முயற்சிகள் எடுப்பேன்.
காயத்துக்குப் பிறகு விஜய் ஹசாரே போட்டியில் ஆடியது உதவியது, அதில் 366 ரன்களை எடுத்ததோடு, 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றினேன். என்னுடைய சிந்தனை எளிமையானது, பேட்டிங் செய்யும் போது பவுலர் போல் சிந்திக்க வேண்டும், அதே போல் பவுலிங் செய்யும் போது பேட்ஸ்மென் போல் சிந்திக்க வேண்டும் அவ்வளவே. எதிரணி வீரர் மனநிலையை சரியாகக் கணிப்பதில்தான் எல்லாம் அடங்குகிறது.
என்னுடைய போட்டியாளர்கள் யார் என்றெல்லாம் யோசிப்பதில்லை, என்னுடைய திறமையை அதிகரித்து களத்தில் அதனை செயல்படுத்துவதிலேயே என் கவனம் உள்ளது” என்றார் குருணால் பாண்டியா.