சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், காந்த் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
சீனாவின் புஸாவ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் சாய்னா 21-17, 21-17 என்ற நேர் செட்களில் சீனாவைச் சேர்ந்த 17-ம் நிலை வீராங்கனையான லியூ ஸின்னை தோற்கடித்தார்.
சர்வதேச தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் சாய்னா, இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் ஜப்பானின் அகானே யமாகுச்சியை சந்திக்கிறார்.
ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் காந்த் 21-11, 13-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது அவரை எதிர்த்து விளையாடிய ஜெர்மனியின் மார்க் ஸ்விப்லர் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.
இதையடுத்து ஸ்ரீகாந்த் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் சீனாவின் லின் டானை சந்திக்கிறார் ஸ்ரீகாந்த். லின் டான் ஒலிம்பிக்கில் இரு முறையும், உலக சாம்பியன் ஷிப்பில் 5 முறையும் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார்.