விளையாட்டு

நிச்சயம் அயல்நாட்டுத் தொடர்களிலும் சாதிக்க முடியும்: அனில் கும்ப்ளே உறுதி

பிடிஐ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சவாலான டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்று வென்றதையடுத்து இதே வெற்றிகளை அயல்நாட்டுத் தொடர்களிலும் ஏன் பெற முடியாது? நிச்சயம் முடியும் என்று பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

அனில் கும்ப்ளே கூறியதாவது:

மிக அருமையான வெற்றி, நாங்கள் ஏற்கெனவே பேசியபடி ஒரு சமயத்தில் ஒரு செஷன், ஒரு ஆட்டம், ஒரு தொடர் என்றே நாம் சிந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

விராட் கோலி காயமடைந்த விளையாட முடியாவிட்டாலும் அணி நிமிர்ந்து நின்றது. ரஹானே அற்புதமாக கேப்டன்சி செய்தார். அதுவும் டாஸ் தோற்ற பிறகு இது ஒரு அபார வெற்றியே. முதலில் 300 ரன்களைத் துரத்தி முன்னிலை பெற்றது, பிறகு பவுலர்கள் ஆஸ்திரேலியாவைச் சுருட்டியதும் அபாரமானது.

இந்த சீசன் முழுதுமே வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக வீசினர். வேகமாக வீசினர், பிட்ச் குறித்து அவர்களை திசைத்திருப்பும் கருத்துகள் மேற்கொள்ளப்பட்டன. இதுதான் நாங்கள் ஆட்டத்தை அணுகும் விதத்தை மாற்றியது.

இந்த வீரர்கள், பின் கள வீரர்களின் பங்களிப்புகள் ஆகியவற்றுடன் நாம் அயல்நாட்டில் வெல்ல முடியாது என்பதற்கான காரணங்கள் எதுவும் இல்லை.

ஏனெனில் இந்தத் தொடரிலேயே கூட எங்களுக்கு பரிச்சயமில்லாத புதிய களத்தில்தான் ஆடினோம், எனவே அயல்நாட்டில் வெல்வது என்பது கடினமல்ல, இன்னும் ஒரு பகுதியில் முன்னேற வேண்டுமெனில் கேட்சிங்கில் நாம் நிச்சயம் முன்னேற வேண்டும்.

அஸ்வின், அவர் என்ன செய்வார் என்பது நமக்கு தெரிந்ததே. ஆனால் ஜடேஜா மேல் எப்போதும் வெளிச்சம் விழுந்ததில்லை, ஆனால் இப்போது அவர் நம்பர் 1 ஸ்பின்னராகத் திகழ்கிறார்.

SCROLL FOR NEXT