தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி 20 ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.
கேப்டவுன் நகரில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது. முழங்கை காயம் காரணமாக 6 மாத காலத்துக்கு பிறகு களமிறங்கிய அதிரடி பேட்ஸ்மேனான டி வில்லியர்ஸ் 44 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் விளாசினார். ஹென்ரிட்க்ஸ் 41, மோஸ்லே 32 ரன்கள் சேர்த்தனர்.
170 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரரான நிரோஷன் டிக்வெலா 51 பந்துகளில், 1 சிக்ஸர், 10 பவுண்டரி களுடன் 68 ரன்கள் சேர்த்தார். தரங்கா 20, சந்திமால் 5, டி சில்வா 19, குணரத்னே 11 ரன்கள் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் பிரசன்னா 16 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். பேட்டர்சன் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பிரசன்னா, குணரத்னேவுடன் இணைந்து பதற்றம் இல்லாமல் விளையாடிய வெற்றியை வசப்படுத்தினார்.
இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர்களின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. 5 கேட்ச்களை தவறவிட்டனர். மேலும் இளம் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி கிடி 2 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். இதுவும் தென் ஆப்பிரிக்க அணிக்கு பாதகமாக அமைந்தது.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக டிக்வெலா தேர்வானார். 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. வெற்றி குறித்து இலங்கை கேப்டன் சந்திமால் கூறும்போது,“நிலவில் மிதப்பதை போன்று உணருகிறேன். டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பெகார்தின் கூறும்போது, “இந்த தோல்வி ஒரு கசப்பான மாத்திரையை விழுங்குவது போல் உள்ளது. நாங்கள் போதுமான அளவில் ரன்களை குவித்தோம். ஆனால் அதிகளவிலான கேட்ச் களை தவறவிட்டதால் பின்ன டைவை சந்தித்தோம்’’ என்றார்.