மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனதை அடுத்து இந்தியா 2-0 என்று வெற்றி பெற்றாலும் டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் நம்பர் 1 நிலைக்கு முதன் முறையாக முன்னேறியது.
இங்கிலாந்துக்கு எதிராக தொடரை 2-2 என்று டிரா செய்த பாகிஸ்தான் கடந்த வாரம் 2-ம் நிலையில் இருந்தது, இந்தியா கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றிருந்தால் பாகிஸ்தான் அதிலேயே நீடித்திருக்கும், ஆனால் மழை இந்தியாவின் முதல் நிலையைத் தக்கவைப்பில் புகுந்து விளையாடி விட்டது.
மே.இ.தீவுகளுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் 22 ஓவர்களே சாத்தியமானது 62/2 என்ற நிலையில் அப்படியே டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
மாறாக பாகிஸ்தான் கடந்த ஆகஸ்ட் 2014லிருந்து டெஸ்ட் தொடரை இழக்கவில்லை என்ற காரணத்தினால் இங்கிலாந்து தொடர் டிரா மூலம் முதல் முறையாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது. அதற்கு முன்பாக டெஸ்ட் தரவரிசையில் 6-ம் இடத்தில் இருந்தது பாகிஸ்தான்.
அதன் பிறகு இலங்கையை 2-1 என்றும், ஆஸ்திரேலியாவை 2-0 என்றும் பங்களாதேசை 1-0 என்றும் வெற்றி பெற்றதோடு நியூஸிலாந்துக்கு எதிராக 1-1 என்று யு.ஏ.இ.-யில் டிரா செய்தது பாகிஸ்தான்.