விளையாட்டு

இந்தியாவில் வெற்றி பெற சுழற்பந்து வீச்சாளர்களை அடித்து ஆட வேண்டும்: கிளென் மெக்ரா ஆலோசனை

இரா.முத்துக்குமார்

இலங்கைக்கு எதிராக 3-0 என்று டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில் ஸ்பின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது அவசியமானதும், அவசரமானதுமாகும் என்றார் கிளென் மெக்ரா.

கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த கிளென் மெக்ரா கூறியதாவது:

இலங்கையில் பந்துகள் கடுமையாகத் திரும்பும் பிட்ச்களில் ஆஸ்திரேலியாவுக்கு நடந்ததை வைத்துப் பார்க்கும் போது, ஆஸி. அணியினர் இன்னும் அதிகமாக கடினமாக உழைக்க வேண்டியுள்ளது.

மிக சீக்கிரமாக ஸ்பின் பந்துவீச்சை எதிர்கொள்ள உத்திகளை வகுக்கவில்லை எனில் இந்தியாவில் மீண்டும் ஒரு பயங்கர தோல்வியைச் சந்திக்க நேரிடும்.

ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட் ஆகாமல் விக்கெட்டைக் காத்துக் கொள்வது எப்படி என்கிற ரீதியில் ஆடுகின்றனர், தனிப்பட்ட வீரரோ, அணியாகவோ ஸ்பின் பந்திற்கு எதிராக எழுச்சியுற வேண்டிய அவசியம், அவசரம் உள்ளது.

ரன்களை விரைவில் குவிக்க முனைவது அவசியம், விக்கெட்டை பாதுகாப்பது என்ற உத்தி செல்லுபடியாகாது.

இந்தியாவில் ஆஸ்திரேலியா தோற்பதைப் பார்க்க நிறைய ரசிகர்கள் மைதானத்திற்கு வருவார்கள்.

2001, 2004 தொடர்களை எடுத்துக் கொண்டால் மேத்யூ ஹெய்டன் ஸ்பின்னுக்கு எதிராக ஸ்வீப் ஷாட் ஆயுதத்தை சிறப்பாகக் கையாண்டு வெற்றி கண்டார். அவர் அருமையாக ஆடினார், ஸ்பின்னில் ரன்களை குவிக்கவே அவர் விரும்பினார்.

எனவே அத்தகைய அணுகுமுறையே அவசியமானது.

இவ்வாறு கூறினார் மெக்ரா. இலங்கைக்கு எதிராக ஆக்ரோஷ அணுகுமுறையில்தான் ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT