20 நாடுகள் பங்கேற்கும் ‘அம்மா உலக கோப்பை’ கபடிப் போட்டி வரும் பிப்ரவரி மாதம் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அமெச்சூர் கபடிக் கழகச் செயற்குழு கூட்டம் நேற்று மதுரையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த கபடிக் கழக மாநில தலைவர் சோலை எம். ராஜா கூறியது:
தமிழ்நாடு அமெச்சூர் கபடிக் கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து வருகிற பிப்ரவரி 24-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை ஆடவர் மற்றும் மகளிருக்கான ‘அம்மா உலக கோப்பை’ கபடி போட்டியை நடத்துகின்றன.
இந்தப் போட்டியில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், ஈரான், துர்கிஸ்தான், நேபாளம், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, சீன தைபே, மெக்ஸிகோ, இத்தாலி, கனடா ஆகிய 20 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் சுமார் 10,000 பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் அரங்கம் ஏற்பாடு செய்யப்பட உள்ளது என்றார்.