விளையாட்டு

முதல் டெஸ்டில் கோலி சதம்: இந்தியா 255/5

செய்திப்பிரிவு

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 255 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்திய அணியின் சார்பில் விராத் கோலி சதமடித்தார்.

தென் ஆப்பிர்க்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில், இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகள் ஆடும் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. முதலில் டாஸை வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. துவக்க ஆட்டக்காரர்கள் தவான் மற்றும் விஜய் இருவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பதினைந்தாவது ஓவரில் புஜாராவுடன் ஜோடி சேர்ந்த கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாராவும் நிதானமாக ஆடி கோலிக்கு பக்கபலமாக இருந்தார். இருவரும் 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்திருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக புஜாரா ரன் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ரோஹித் ஷர்மாவும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தேனீர் இடைவேளைக்குப் பிறகு, ஆட்டத்தின் 63-வது ஓவரில் கோலி சதத்தை எட்டினார்.அப்போது 140 பந்துகளை சந்தித்திருந்த கோலி, 16 பவுண்டரிகளையும் அடித்திருந்தார். சிறப்பாக ஆடி வந்த கோலி 119 ரன்கள் எடுத்திருந்தபோது, காலிஸின் பந்தில் டுமினியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 219 மட்டுமே.

பின்பு களமிறங்கிய கேப்டன் தோனி, ரஹானேவுடன் சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தார். பதட்டமின்றி ஆடிய இருவரும் நாளின் ஆட்டம் முடியும் வரை தங்களது விக்கெட்டுகளை இழக்காமல் காப்பாற்றிக் கொண்டனர். இறுதியாக, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்திருந்தது.தோனி 17 ரன்களுடனும், ரஹானே 43 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி அவ்வபோது விக்கெட் எடுத்தாலும், ஒரு நாள் போட்டியில் இருந்த அளவிற்கு, அவர்களால் இந்திய வீரர்களை சோதிக்க முடியவில்லை. அந்த அணியின் சார்பில் ஸ்டேய்ன், மார்கல், ஃபிலாண்டர், காலிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

ஒரு நாள் தொடரை இழந்திருந்த இந்தியா, இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்காமல் தாக்கு பிடிக்குமா என்பதே பலரது சந்தேகமாக இருந்தது. ஆனால் நினைத்ததை விட சிறப்பாகவே தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை இந்திய வீரர்கள் சமாளித்தனர். முக்கியமாக, கோலி தனது தேர்ந்த ஆட்டத்தின் மூலம் சதத்தைக் கடந்தார். தென் ஆப்பிரிக்க மண்ணில் சதமடிக்கும் 8வது இந்திய வீரர் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

மீதம் 5 விக்கெட்டுகள் உள்ள நிலையில் இந்தியா குறந்தது 350 ரன்களாவது குவித்தால்தான் தென் ஆப்பிரிக்காவுக்கு சவாலாக இருக்கும். நாளைய முதல் பாதி ஆட்டம் இந்த டெஸ்ட் போட்டியின் மொத்த போக்கையும் மாற்றலாம். இன்று நிதானமாக ஆடிய இந்தியாவின் அணுகுமுறை நாளை எப்படி இருக்கும் என்று பார்க்க அனைத்து தரப்பினருமே ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

SCROLL FOR NEXT