தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோல்வி கண்டதற்கு பௌலர்களே காரணம். அவர்களின் மோசமான செயல்பாடு பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது என்று இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 141 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி கண்டது இந்தியா.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்ட இந்திய அணி 41 ஓவர்களில் 217 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியில் கேப்டன் தோனியை (65 ரன்கள்) தவிர வேறு யாரும் அரை சதமடிக்கவில்லை.
போட்டி முடிந்த பிறகு பேசிய கேப்டன் தோனி, “மொத்தத்தில் அணியின் மோசமான செயல்பாட்டால் தோல்வி கண்டுள்ளோம். பௌலர்கள் ரன்களை வாரி வழங்க ஆரம்பித்ததில் இருந்து இந்திய அணியின் மோசமான செயல்பாடு தொடங்கியது. இது 300 ரன்களுக்கு மேல் குவிக்கக்கூடிய ஆடுகளம் அல்ல.
தென் ஆப்பிரிக்காவை 300 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருந்தால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்காது. தென் ஆப்பிரிக்கா 358 ரன்கள் குவித்தது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது.
மோஹித் சர்மா அனுபவம் குறைந்த வீரர். இந்தப் போட்டியில் இருந்து அவர் நிறைய கற்றுக்கொள்வார். இதேபோல் புவனேஸ்வர் குமாரும் வெளிநாட்டு மண்ணில் பெரிய அளவில் விளையாடிய அனுபவம் இல்லாதவர் என்றார்.