சைப்ரஸில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச பையத்லான் போட்டியில் பங்கேற்ற நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் அழகு முருகன் போதிய பயிற்சியின்றி கடலில் நீந்தியதால், உப்புத் தண்ணீரைக் குடித்து மயக்கம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகில இந்திய பென்டத்லான் சம்மேளனத்தின் அசட்டையான போக்கே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
கடலில் நீந்துவதற்கு ஒருநாள் மட்டும் பயிற்சி கொடுத்துவிட்டு, இந்திய வீரர்களை சைப்ரஸ் கடலில் தள்ளி, அவர்களின் உயிரோடு விளையாடியிருக்கிறது இந்த பென்டத்லான் சம்மேளனம். பையத்லான் போட்டி என்பது குறிப்பிட்ட தூரத்துக்கு தரையில் ஓடிவிட்டு, பின்னர் கடலில் நீந்தி, மறுபடியும் குறிப்பிட்ட தூரத்துக்கு ஓடி இலக்கை எட்டக்கூடியது. கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் மகாராஷ்டிர வீரர் ஒருவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். அப்போது நீச்சல் குளத்தில் போட்டி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் 6 மற்றும் 7-ம் தேதிகளில் கோவாவில் நடைபெற்ற தேசிய பையத்லான் போட்டியில் பல்வேறு வயது பிரிவுகளில் சிறப்பிடம் பெற்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 23 பேர் சைப்ரஸில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டனர். இதில் 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் அழகு முருகன் (முன்னீர்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி), ஆர். இஸ்மான்சிங், அபிதா (வண்ணார்பேட்டை விவேகானந்தா மெட்ரிக் பள்ளி), ஷர்மிளா, கிளாடிஸ் ஸ்வேதா (பாளையங்கோட்டை பெல் மெட்ரிக் பள்ளி) ஆகிய 5 பேரும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சபரிநாதன் மட்டும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்.
இந்த 23 பேருக்கும் புணேவில் அளிக்கப்பட்ட சிறப்பு பயிற்சியின்போது நீச்சல் குளத்தில் மட்டுமே பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சி முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதுதான், சைப்ரஸ் போட்டியில் கடலில் நீந்த வேண்டும் என இந்திய பென்டத்லான் சம்மேளன நிர்வாகிகளுக்கு தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இந்திய வீரர்களுக்கு கடலில் நீந்திய அனுபவம் இல்லை என்பது தெரிந்தும்கூட, அதைப் பற்றி கவலைப்படாமல் அவர்களை சைப்ரஸுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் இந்திய பென்டத்லான் சம்மேளனத்தினர். அங்கு ஒரு நாள் மட்டும் இந்திய வீரர்களுக்கு கடலில் பயிற்சியளித்துவிட்டு, போட்டியில் களமிறக்கியிருக்கிறார்கள்.
இந்திய வீரர், வீராங்கனைகளும் வேறு வழியில்லாமல் உயிரை துச்சமென மதித்து கடலில் குதித்துள்ளனர். நீச்சல் குளத்தில் மட்டுமே நீந்தி பயிற்சி பெற்றிருந்த அவர்களால், கடலில் எழுந்த அலை, கடல் நீரில் காணப்படும் உப்புத்தன்மை ஆகியவற்றை சமாளிக்க முடியவில்லை. அவர்கள் கடல் நீரைக் குடித்தபோதும், ஒரு வழியாக கரையை அடைந்து, மீண்டும் ஓடத் தொடங்கியுள்ளனர். முன்னீர்பள்ளம் அரசுப் பள்ளி மாணவர் அழகு முருகன் சற்று அதிகமாக கடல் தண்ணீரை குடித்ததால் ஓட முடியாமல் மயங்கி விழுந்திருக்கிறார். அவரை அங்கிருந்த ஆம்புலன்ஸில் ஏற்றி சென்று சிகிச்சை அளித்திருக்கிறார்கள். அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார். அனைவரும் பதக்க வாய்ப்பையும் இழந்து நாடு திரும்பியிருக்கிறார்கள்.
இந்த வீரர்களில் பெரும்பாலானோர் தங்களின் சொந்த செலவிலும், சிலர் வங்கி போன்ற சில இடங்களில் நிதியுதவி பெற்றும் போட்டியில் பங்கேற்றிருக்கிறார்கள். ஒருவேளை இந்த வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய பென்டத்லான் சம்மேளனம் செலவு செய்திருந்தால், நிச்சயம் இந்தப் போட்டிக்கு அவர்களை அனுப்பியிருக்காது. வீரர்களைத் திரும்பப் பெற்றிருக்கும். ஆனால் அனைவரும் அவர்களுடைய சொந்த செலவில் சென்றதால், இந்திய பென்டத்லான் சம்மேளனம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்திருக்கிறது.
கடலில் நீந்துவதற்கு ஒரு நாள் பயிற்சி போதுமானதா? அப்படியிருக்கையில் ஒருநாள் பயிற்சி மட்டுமே பெற்ற இந்த சிறுவர்களையும், சிறுமிகளையும் கடலில் நீந்தச் சொல்லியிருப்பது எந்த வகையில் நியாயம். ஒருவேளை அழகு முருகனுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருந்தால், என்னவாகியிருக்கும். கடைசி நேரத்தில்தான் போட்டி கடலில் நடைபெறுகிறது என எங்களுக்குத் தெரியும் என்று இந்திய பென்டத்லான் சங்கம் கூறுவது ஏற்புடையதாக இல்லை.
பெற்றோரும் ஒரு காரணம் விளையாட்டு ஒதுக்கீட்டில் ஏதாவது ஒரு படிப்பில் சேருவதற்காக பெற்றோர் பணம் செலவழிக்கத் தயாராகியிருக்கிறார்கள். பணம் செலவழிப்பதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள். போட்டி தொடர்பான மற்ற விஷயங்களை விளையாட்டு சங்க நிர்வாகிகளிடம் அவர்கள் கேட்பதில்லை. விளையாட்டில் பங்கேற்பதன் மூலம் கல்வியில் இடஒதுக்கீடோ, வேலைவாய்ப்போ பெற எல்லோரும் முயற்சிக்கிறார்கள். அதனால்தான் இதுபோன்ற விபரீதங்கள் ஏற்படுகின்றன. எனவே பெற்றோர் இந்த விஷயங்களில் பொறுப்போடு செயல்பட வேண்டியது அவசியம்.
திகைத்துப் போனோம்
இது தொடர்பாக இஸ்மான்சிங், மு. அபிதா ஆகியோரிடம் பேசினோம். குளத்துக்குப் பதிலாக கடலில் சென்று திடீரென்று நீச்சல் அடிக்க சொன்னதால் திகைத்துப் போனோம். கடலில் நீந்த முடியாமல் திணறினோம். காரணம் போதுமான பயிற்சி இல்லை. இதனால் இந்திய வீரர், வீராங்கனைகள் 12 முதல் 24-வது வரையிலான இடங்களையே பிடிக்க முடிந்தது என்றனர். தேசிய அளவிலான போட்டியில் இஸ்மான்சிங் முதலிடத்தையும், அபிதா 2-வது இடத்தையும் பிடித்தவர்கள் ஆவர்.
இது தொடர்பாக தமிழ்நாடு பென்டத்லான் சங்க பொதுச் செயலர் பாலவிநாயகம் கூறுகையில், “இந்திய கடல் பகுதியின் பெரும் பகுதி பயிற்சிக்கு ஏற்றதாக இல்லை. பையத்லான், பென்டத்லான் போட்டிகளில் இப்போதுதான் நாம் சர்வதேசப் போட்டியில் பங்கேற்கச் செல்கிறோம். சர்வதேச விதிப்படி இந்தப் போட்டியில் ஓட்டப் பந்தயத்தை சாலை அல்லது மைதானத்தில் நடத்தலாம். நீச்சல் போட்டியை கடலிலோ அல்லது குளத்திலோ நடத்தலாம். அடுத்த முறை எங்கு போட்டி நடைபெறுகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு பயிற்சியளிக்கப்படும்” என்றார்.