ரஷ்யாவில் உள்ள சூச்சியில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் செஸ் போட்டியின் 3-வது ஆட்டத்தில் மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தினார்.
இதன் மூலம் 3 போட்டிகள் முடிவில் இருவரும் தலா 1.5 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கின்றனர். மொத்தம் 12 ஆட்டங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று தொடக்கம் முதலே ஆனந்த், கார்ல்சனுக்கு சவால்களை அளித்தார். இதன் மூலம் தொடக்கத்திலிருந்தே முன்னிலையில் இருந்தார். கார்ல்சனின் எதிர்த்தாக்குதல்களை முறியடித்தார் ஆனந்த். இதனையடுத்து 34-வது நகர்த்தலில் கார்ல்சன் தோல்வியை ஒப்புக் கொள்ள நேரிட்டது.
முதல் 23 நகர்த்தல்களை ஆனந்த் படபடவென 31 நிமிடங்களில் செய்து அசத்தினார். தொடர்ந்து பிடியை விட்டுக் கொடுக்காமல் கார்ல்சனின் சவால்களை முறியடித்து எதிர்பார்த்தபடியே இன்று வெற்றி பெற்றார்.
முதல் ஆட்டம் டிரா ஆனது. 2-வது ஆட்டத்தில் ஆனந்த் சில தவறுகளைச் செய்து கார்ல்சனிடம் தோல்வி தழுவினார். இன்று வெள்ளைக்காய்களில் ஆடி வெற்றிப்பாதைக்குத் திரும்பியுள்ளார்.