விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் கெர்பர், ஆன்டி முர்ரே- சானியா, போபண்ணா ஜோடிகள் முன்னேற்றம்

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஏஞ்சலிக் கெர்பர், ஆன்டி முர்ரே, ரோஜர் பெடரர் உள்ளிட்டோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர். சானியா மிர்சா, போபண்ணா ஜோடிகள் அடுத்த சுற்றில் நுழைந்தது.

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது. முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் தனது சகநாட்டு வீராங்கனையான கரினாவை 6-2, 6-7, 6-2 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார்.

நேற்று 29-வது பிறந்த நாளை கொண்டாடிய கெர்பருக்கு இந்த வெற்றி பிறந்தநாள் பரிசாக அமைந்தது. 7-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருசா 7-5, 6-4 என்ற நேர் செட்டில் போராடி அமெரிக்காவின் சமந்தா கிராபோர்டை தோற்கடித்தார்.

ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற புயிர்டோ ரிகோவாவின் மோனிகா புயிக் 4-6, 4-6 என்ற நேர் செட்டில், ஜெர்மனியின் மோனா பார்தலிடம் வீழ்ந்தார். மகளிர் பிரிவில் நடைபெற்ற மற்ற ஆட்டங்களில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ரஷ்யாவின் ஸ்வெட்லனா குஷ்நட்சோவா ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆடவர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 6-3, 6-0, 6-2 என்ற நேர் செட்டில் ரஷ்யாவின் ஆன்ட்ரே ருப்லெவை வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந் தார். 17-ம் நிலை வீரரான சுவிட்சர் லாந்தின் ரோஜர் பெடரர் 7-5, 6-3, 7-6 என்ற நேர் செட்டில் தகுதி நிலை வீரரான அமெரிக்காவின் நோவா ருபினை வீழ்த்தினார்.

17 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள பெடரர் தனது 3-வது சுற்றில் 10-ம் நிலை வீரரான செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை சந்திக்கிறார். பெர்டிச் 2-வது சுற்றில் 6-3, 7-6, 6-2 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் ஹாரிசனை வீழ்த்தினார்.

4-ம் நிலை வீரரான சுவிட்சர் லாந்தின் வாவ்ரிங்கா 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனையும், 5-ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷிகோரி 6-3, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்சின் ஜெர்மி ஷார்டியையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னே றினர்.

சானியா அசத்தல்

ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, உருவேயின் பாப்லோ குயவாஸ் ஜோடி 6-4, 7-6 என்ற நேர் செட்டில் பிரேசிலின் தாமஸ் பெல்லுஸி, அர்ஜென்டி னாவின் மெக்ஸிமோ கோன்சா லெஸ் ஜோடியை வீழ்த்தியது.

மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைகோவா ஜோடி 6-3, 6-1 என்ற நேர் செட்கணக்கில் இங்கிலாந்தின் ஜாய்ஸ்லின், அனா ஸ்மித் ஜோடியை தோற்கடித்தது.

SCROLL FOR NEXT