2004-ம் ஆண்டு பாகிஸ்தான் தொடரின் போது பாகிஸ்தான் விடுதியில் தன்னையும் யுவராஜ் சிங்கையும் ஷோயப் அக்தர் தாக்கினார் என்று ஹர்பஜன் சிங் கூறியிருப்பதை சிரித்து ஒதுக்கினார் ஷோயப் அக்தர்.
ஆப் கி அதாலத் நிகழ்ச்சியில் ஹர்பஜன் சிங் கூறியதாவது:
ஷோயப் அக்தர் என்னை கடுமையாக வசைபாடினார். அவர் எங்களுடன் அமர்வார், எங்களுடன் சாப்பிடுவார், அவர் எங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததனால் என்னவோ அவர் எங்களை உத்தரவாதமாக எடுத்துக் கொண்டு விட்டார். அவர் ஒருமுறை அவர் பந்தில் சிக்ஸ் அடிக்க முடியுமா என்று சவால் வைத்தார், நான் சிக்ஸ் அடித்தேன் அவர் அதிர்ச்சியடைந்தார். பிறகு 2 தொடர்ச்சியான பவுன்சர்களை அவர் வீசினார், நான் அதனை எளிதில் ஆடாமல் விட்டேன். அவர் உடனே என்னை திட்டத் தொடங்கினார். நானும் பதிலடி கொடுத்தேன், ஆனால் ஆட்டம் முடிந்தவுடன் ஒன்றும் நடக்காதது போல் நாங்கள் ஒன்றாகவே இருந்தோம்.
ஒருமுறை என் அறைக்கு வந்து என்னை உதைப்பேன் என்றார், நானும் வா, யார் யாரை உதைக்கிறார்கள் என்று பார்ப்போம் என்றேன். நான் உண்மையில் பயந்தேன், ஏனெனில் அவர் இரும்பு உடல் படைத்தவர், அறையில் ஒருமுறை அவர் என்னையும் யுவராஜையும் தாக்கினார். அவர் வலுவாக இருந்ததால் எங்களால் அவரைப் பிடிக்க முடியவில்லை.
என்று கூறியிருந்தார்.
ஹர்பஜன் சிங் இவ்வாறு கூறியதையடுத்து ஷோயப் அக்தரிடம் இது பற்றி கேட்ட போது, “அவர் இதனை பெரிது படுத்தியிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆம். 2004ம் ஆண்டு ராவல்பிண்டியில் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் விளையாடிய போது அவர் கூறும் சம்பவம் நடந்தது. ஆனால் அது அப்படியல்ல. அது சீரியஸானது அல்ல ஒரு கேளிக்கை விளையாட்டுத்தான். ஹர்பஜனும், யுவராஜும் எனது இளைய சகோதரர்கள் அவர்களை தாக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
அவர்கள் இருவருமே என்னுடன் நல்ல நட்பு பாராட்டியவர்கள், எனது அறைக்கு வருவார்கள், இரவு உணவு அருந்துவோம். யுவி இஸ்லாமாபாத்தை சுற்றிப் பார்க்க வேண்டும் என்பார், நாங்கள் நல்ல நண்பர்கள், அவர்களைப் போய் அடிப்பதாவது” என்று சிரித்தபடியே ஹர்பஜன் கூறியதை ஒதுக்கித் தள்ளினார்.
அப்போதைய பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கும் இந்தச் சம்பவத்தை உறுதி செய்தார், அதாவது விடுதியில் நிகழ்ந்ததை உறுதி செய்தார். “ஷோயப் அக்தர் நல்ல உடற்கட்டுடன் இருப்பவர், வலுவானவர், அவரை கட்டிப்பிடித்தாலோ, கையை குலுக்கினாலோ மற்ற வீரர்களுக்கு அதுவே பெரிய வலி நிரம்பியதாக இருக்கும்” என்றார்.