விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியில் மணீஷ் பாண்டேவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்

இரா.முத்துக்குமார்

இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் காயம் காரணமாக மணீஷ் பாண்டே விளையாட முடியாமல் போனதையடுத்து தினேஷ் கார்த்திக் அவருக்குப் பதிலாக இந்திய அணியில் அழைக்கப்பட்டுள்ளார்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றின் போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த மணீஷ் பாண்டே காயமடைந்தார். இது மணீஷ் பாண்டேவுக்கு பின்னடைவாகியுள்ளது. தன்னை நிரூபிக்க வேண்டிய நேரத்தில் அவருக்கு இந்தக் காயம் நிச்சயம் வருத்தத்தை அளித்திருக்கும்.

மாறாக நீண்டகாலமாக மீண்டும் இந்திய அணியில் நுழைய வாய்ப்பு தேடி அபாரமாக சில இன்னிங்ஸ்களை உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடியுள்ள தினேஷ் கார்த்திக் தன்னை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

2004-ல் அவர் அறிமுகமானதிலிருந்து 71 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார், இதில் 24 போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளார். மொத்தம் 1313 ரன்களை 27.93 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

2013-ல் சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்ற போது அந்த அணியில் இடம்பெற்றிருந்தார் கார்த்திக். 2014-ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது ஆடியதே சர்வதேச கிரிக்கெட்டில் இவர் கடைசியாகத் தோன்றியது.

உள்நாட்டு கிரிக்கெட் முக்கியத் தொடரான ரஞ்சி டிராபியில் 2016-17 சீசனில் 54.15 என்ற சராசரியில் 704 ரன்களை ஒரு சதம் 5 அரைசதங்களுடன் எடுத்துள்ளார் தினேஷ் கார்த்திக். விஜய் ஹசாரே டிராபி மற்றும் தியோதர் டிராபி போட்டிகளில் மொத்தம் 854 ரன்களையும், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் லயன்ஸ் அணியில் 2-வது அதிகபட்ச ரன்களாக 361 ரன்களையும் எடுத்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

SCROLL FOR NEXT