இந்திய படகுப் போட்டி கூட்டமைப்பின் பொருளாளர் பாலாஜி, தமிழ்நாடு படகு போட்டி சங்கத்தின் தலைவர் சாக்கோ கன்டத்தில் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சப்-ஜூனியர் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான முதலாவது தேசிய சேலஞ்சர் ஸ்பிரின்ட் துடுப்பு படகு சாம்பியன் போட்டிகள் சென்னையில் இன்று முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. போரூரில் உள்ள ராமச்சந்திரா ஆர்த்ரோகோபி மற்றும் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் சென்டர் (எஸ்ஆர்ஏஎஸ்எஸ்சி) தண்ணீர் விளையாட்டு மையத்தில் இந்தப் போட்டிகள் நடைபெறும்.
இந்தியாவில் முதல் முறையாக மின்னொளியில் இரவில் நடைபெறும் தேசிய படகுப் போட்டிகள் இதுவாகும். சப்-ஜூனியர் பிரிவில் 15 வயதுக்குட்பட்டவர்களும், சேலஞ்சர் ஸ்பிரின்ட் பிரிவில் 22 வயது வரை உள்ளோரும் பங்கேற்க உள்ளனர்.
மொத்தம் 19 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 350 வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 24 வீரர்கள் பங்கேற்கின்றனர். சர்வதேச அளவில் நடத்தப்படும் படகுப் போட்டிகளுக்கு இணையாக இந்தப் போட்டிகள் நடைபெறும். போட்டிகளை இந்திய விளையாட்டுத்துறைச் செயலர் ராஜீவ் யாதவ் தொடங்கி வைக்கிறார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.