விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் காலிஸ் ஓய்வு அறிவிப்பு

செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வீரரும், ஆல்ரவுண்டருமான ஜாக் காலிஸ், டெஸ்ட் மற்றும் முதல் தர போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நாளை டர்பன் நகரில், இந்தியாவுக்கு எதிராக ஆடப்போகும் டெஸ்ட் போட்டியே அவரது கடைசி டெஸ்ட் போட்டியாகும். ஆனால் தொடர்ந்து காலிஸ் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவார்.

38 வயதாகும் காலிஸ், 1995ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலிருந்து தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடர்ந்தார். இந்த 18 வருடங்களில் இதுவரை 165 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13174 ரன்களை சேர்த்துள்ளார். அவரது சராசரி 55.12. பந்துவீச்சில் 292 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 199 கேட்சுகளையும் பிடித்துள்ளார். இப்படி விளையாட்டின் மூன்று முக்கிய பிரிவிலும் சிறப்பாக செயல்பட்டவர் காலிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

"ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை நாங்கள் விளையாட இருக்கிறோம். அணியும் உற்சாகமாக காணப்படுகிறது. இந்த சூழலில் இது எளிதாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. ஆனால் இதுதான் சரியான நேரம் என நினைக்கிறேன். இதை நான் நிரந்தரப் பிரிவாகப் பார்க்கவில்லை. உடல் தகுதியோடு, ஆடக்கூடிய நிலையில் நான் இருக்கும் பட்சத்தில், 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையை தென் ஆப்பிரிக்கா வெல்ல என்னால் இயன்றதை செய்ய காத்திருக்கிறேன். கடந்த 18 வருடங்களாக தென் ஆப்பிரிக்க அணிக்காக டெஸ்ட்டில் விளையாடியதை நினைத்து பெருமை கொள்கிறேன். களத்தில் இருந்த ஒவ்வொரு நொடியையும் நான் ரசித்திருக்கிறேன் ஆனால் என் டெஸ்ட் சீருடைக்கு ஓய்வு தரும் தருணம் வந்துவிட்டது என நினைக்கிறேன்" என காலிஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

காலிஸின் சாதனைகள்

டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் என்கிற வரிசையில் டெண்டுல்கர், பாண்டிங்க், டிராவிடிற்கு அடுத்த நான்காவது இடத்தில் காலிஸ் உள்ளார்.

புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும்போது சர் இயன் போதம், சோபர்ஸ் போன்ற ஜாம்பவான்களை விட சிறப்பான ஆல்ரவுண்டராக காலிஸ் திகழ்கிறார்.

டெஸ்டில் அதிக சதங்கள் அடித்தவர்கள் வரிசையில் சச்சினுக்கு அடுத்து 44 சென்சுரிக்களுடன் காலிஸ் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இந்த வரிசையில் முதல் பத்து வீரர்களில் இனி இலங்கையின் சங்கக்காரா மற்றும் ஜெயவர்தனா மட்டுமே தொடர்ந்து விளையாட இருப்பவர்கள். காலிஸ் உட்பட மற்றவர்கள் அனைவரும் ஓய்வு பெற்றவர்கள்.

2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தை வீழ்த்தி, டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்த தென் ஆப்பிரிக்க அணியில் காலிஸ் விளையாடியுள்ளார். ஆனால் இந்த 18 வருடங்களில் தென் ஆப்பிரிக்கா ஒரு சர்வதேச ஒரு நாள் தொடரையும் வெல்லவில்லை என்பது வருத்தம் தரக்கூடிய செய்தி.

SCROLL FOR NEXT