விளையாட்டு

அண்டர்-19 கிரிக்கெட் உலகக் கோப்பையிலிருந்து ஆஸ்திரேலியா விலகல்

இரா.முத்துக்குமார்

இந்த மாத இறுதியில் வங்கதேசத்தில் நடைபெறும் 19 வயதுக்குட்பபட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்காது. பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலியா விலகியுள்ளதாக அறிவித்துள்ளது.

ஏற்கெனவே மூத்த ஆஸ்திரேலிய அணி வங்கதேச தொடரை இதே காரணங்களுக்காக ரத்து செய்த நிலையில் தற்போது உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரிலிருந்தே ஆஸ்திரேலியா விலக முடிவெடுத்திருப்பது சர்ச்சைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்தகவல்கள் இருப்பதால் ஆஸ்திரேலிய அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க வங்கதேச பயணத்தை ரத்து செய்த ஆஸ்திரேலியா தற்போது அதே காரணங்களுக்காக உலகக் கோப்பை போட்டியையே துறக்க முன்வந்துள்ளது.

அதாவது வங்கதேசத்தில் ஆஸ்திரேலியர்களுக்கு ஆபத்து என்ற உறுதியான தகவல்களையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்தலைவர் ஜேம்ஸ் சதர்லேண்ட் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அயர்லாந்து அணி பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. பிரிவு-டி-யில் இந்தியா, நேபாளம், நியூஸிலாந்து அணிகளுடன் ஆஸ்திரேலியா இருந்தது, தற்போது அயர்லாந்து ஆஸ்திரேலியாவுக்கு பதிலாக விளையாடவுள்ளது.

SCROLL FOR NEXT