ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி யூனுஸ்கான் சதத்தால் 3-வது நாள் ஆட்டத்தில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. சிட்னியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 135 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 538 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ரென்ஷா 184, டேவிட் வார்னர் 113, பீட்டர் ஹென்ட்ஸ்கோம்ப் 110 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து பேட் செய்த பாகிஸ்தான் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 41 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. ஹசல்வுட் வீசிய 4-வது ஓவரின் முதல் பந்தில் ஷர்ஜீல்கான் 4, பாபர் அசாம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அசார் அலி 58, யூனுஸ்கான் 64 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்த ஜோடி நேற்று 3-வது நாள் ஆட்டத்தை விளையாடியது. அசார் அலி 159 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 152 ஆக இருந்தது. யூனுஸ்கானுடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 146 ரன்களை அசார் அலி சேர்த்தார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் மிஸ்பா உல்-ஹக் 18, ஆசாத் ஷபிக் 4, சர்ப்ராஸ் அகமது 18, முகமது அமீர் 4, வகாப் ரியாஸ் 8 ரன்களில் நடையை கட்டினர். சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்த நிலையில் மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய மூத்த வீரரான யூனுஸ்கான் 208 பந்துகளில், 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 33-வது சதத்தை அடித்தார்.
ஆஸ்திரேலிய மண்ணில் யூனுஸ்கான் சதம் அடிப்பது இதுவே முதல்முறை. இங்கு 11 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள உள்ள அவரது அதிகபட்ச ஸ்கோர் 87 ஆகவே இதற்கு முன்னர் இருந்தது.
மேலும் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்தவர் என்ற சாதனையையும் யூனுஸ்கான் படைத்தார். இத்துடன் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற 11 நாடுகளில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தி உள்ளார் யூனுஸ்கான்.
அவர் ஐக்கிய அரபு எமிரேட் சில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி யிலும் சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் டிராவிட், ஜெயவர்த்தனே, சங்கக்கரா, முகமது யூசுப் ஆகியோர் 10 நாடு களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி களில் சதம் அடித்துள்ளனர்.
நேற்றைய ஆட்டத்தின் முடிவில் பாகிஸ்தான் அணி 95 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. யூனுஸ்கான் 136, யாஷீர் ஷா 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லயன் 3 விக்கெட் கைப்பற்றினார்.
பாகிஸ்தான் அணி பாலோ ஆனை தவிர்க்க 57 ரன்கள் தேவை என்ற நிலையில் கைவசம் 2 விக் கெட்களுடன் இன்று 4-வது நாள் ஆட்டத்தை விளையாடுகிறது.