விளையாட்டு

தோனி என் மீது வைத்த நம்பிக்கையை டெல்லி அணி வைக்கவில்லை: பவன் நேகி ஆதங்கம்

இரா.முத்துக்குமார்

2016 ஐபிஎல் தொடரில் ரூ.8.5 கோடி தொகைக்கு டெல்லி டேர் டெவில்ஸ் அணியினால் ஏலம் எடுக்கப்பட்ட இடது கை சுழற்பந்து வீச்சாளர்/ஆல்ரவுண்டர் பவன் நேகி தனது திறமைகள் மீது தோனி வைத்த நம்பிக்கையை டெல்லி அணி வைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார்.

டெல்லி அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட், கேப்டன் ஜாகீர் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

14 போட்டிகளில் 8 ஆட்டங்களில் மட்டுமே பவன் நேகி ஆடியுள்ளார். அதில் 9 ஓவர்களை மட்டுமே அவர் வீசியுள்ளார். இதனால் தன்னை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

ஏசியன் ஏஜ் என்ற ஊடகத்திற்கு அவர் இது குறித்து கூறும்போது, “எனக்கு ஏன் அதிக வாய்ப்புகள் வழங்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அணி நிர்வாகமும் என்னிடம் இதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடிய போது தோனி எனது திறமைகள் மீது நம்பிக்கை வைத்தார். ஆனால் டெல்லி அணி என் திறமைகள் மீது நம்பிக்கை வைக்கவில்லை (பேட்டிங், பவுலிங்) என்றே நான் கருதுகிறேன்.

சுழற்சி முறையில் அணித்தேர்வு செய்திருக்கலாம், ஏனெனில் நான் நீக்கப்பட்டுள்ளேன் என்று அவர்கள் என்னிடம் கூறவில்லை. இதனால் ரொடேஷன் பாலிசியாக இருக்க வாய்ப்புள்ளது.

இதில் தர்மசங்கடம் என்னவெனில் ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் நான் விளையாடுவேனா மாட்டேனா என்பது பற்றிய குழப்பத்திலேயே இருந்தேன். தெரிந்தவர்கள் நான் ஏன் ஆடவில்லை என்று கேட்கும் போது என்னிடம் அதற்கு உரிய விடையில்லை.

பெஞ்சில் அமர்ந்து கொண்டு மற்றவர்கள் ஆடுவதைப் பார்ப்பது என்பது என்னால் ஜீரணிக்க முடியாததாக இருந்தது. மனத்தளவில் துவண்டு போனேன், ஆனால் நம்பிக்கை இழக்கவில்லை. சீசன் முடிந்த பிறகு டி.ஏ.சேகர் மற்றும் மேலாளர் சுனில் வால்சன் என்னிடம், ‘எனது திறமைகளை நிரூபிக்க போதிய வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை’ என்று கூறி தேற்றினர்.

என்னிடம் கூறப்பட்டது என்னவெனில், உத்தி மற்றும் என்னுடைய ஃபார்ம் இரண்டும் கலந்ததுதான் என்றனர். நான் மிகவும் தன்னம்பிக்கையான மனிதன் ஆனால் இந்த ஐபிஎல் எனக்கு எதிர்மறையாகப் போய்விட்டது. ஜிம்பாவே தொடருக்கு நான் தேர்வு செய்யப்படாதது குறித்து எனக்கு ஆச்சரியமில்லை ஏனெனில் நான் சமீபமாக என்னை நிரூபிக்கவில்லை. எதிர்வரும் ரஞ்சி சீசனில் கடுமையாக உழைப்பேன்” என்றார்.

பவன் நேகிக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளில் அவர் சோபிக்கவில்லை. அவரை ஒரு திடீர் அதிரடி தெரிவாக இறக்கப்பட்டார், ஆனால் அவரது ஸ்ட்ரைக் ரேட் 96.61 அவர் பார்மில் இல்லாததை பறைசாற்றுகிறது. மேலும் டெல்லி அணி பந்து வீச்சில் ஜாகீர் கான், கிறிஸ் மோரிஸ், அமித் மிஸ்ரா பெரும்பாலான விக்கெட்டுகளைக் கைப்பற்றிவிடும் போது பவன் நேகியின் தேவையில்லாமல் போய் விட்டது.

ஆனால் டெல்லி அணியும் 14 போட்டிகளில் 35 முறை அணிச்சேர்க்கையில் மாற்றங்கள் செய்தது, இதில் பவன் நேகி பெஞ்சில் உட்கார நேர்ந்தது என்று டெல்லி அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT