நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 2-வது சுற்றும் டிராவில் முடிந்தது.
முதல் சுற்றைப் போலவே இந்த சுற்றிலும் இருவரும் ஒரே காயை தொடர்ந்து 3 முறை ஒரே கட்டத்துக்கு மீண்டும் மீண்டும் நகர்த்தியதால், 25-வது நகர்த்தலோடு 2-வது சுற்று முடிவுக்கு வந்தது. இந்த சுற்று 1 மணி நேரம், 35 நிமிடங்கள் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-வது சுற்றில் ஆனந்த் வெள்ளைக் காயுடனும், கார்ல்சன் கறுப்புக் காயுடன் களமிறங்கினர். ராஜாவுக்கு முன்னால் இருந்த சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்தி ஆனந்த் ஆட்டத்தைத் தொடங்கினார். இதனால் ஆனந்துக்கு ஏற்றவகையில் ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆனந்தே எதிர்பாராத வகையில் கார்ல்சன் புதிய உத்தியைக் கையாண்டார். இதில் காரகன் முறை ஆட்டத்தை வெளிப்படுத்திய கார்ல்சன், தனது பிஷப்புக்கு (மந்திரி) முன்னால் இருந்த சிப்பாயை ஒரு கட்டம் நகர்த்தினார். அடுத்ததாக ராணிக்கு முன்னால் இருந்த சிப்பாயை ஆனந்த் நகர்த்த, கார்ல்சனும் தனது ராணிக்கு முன்னால் இருந்த சிப்பாயை நகர்த்தி ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தினார்.
ஆனந்த் பதிலடி
ஆனந்த் தனது 3-வது நகர்த்தலில் குதிரையை முன்னோக்கி நகர்த்த, கார்ல்சன் தனது சிப்பாயால், ஆனந்தின் (ராஜாவுக்கு நேராக முன்னால் இருந்த) சிப்பாயை வெட்டினார். இதையடுத்து தனது சிப்பாயை வெட்டிய கார்ல்சனி்ன் சிப்பாயை ஆனந்த் தனது குதிரையால் வீழ்த்தி பதிலடி கொடுத்தார். இதன்பிறகு ஆனந்தின் குதிரை மீது கார்ல்சன் தனது பிஷப்பால் தாக்குதல் தொடுத்தார். ஆனால் ஆனந்த் அதே குதிரையால் கார்ல்சனின் பிஷப்பை வீழ்த்தும் முயற்சியில் இறங்க, கார்ல்சன் தனது பிஷப்பை பின்னோக்கி நகர்த்தினார்.
ராணிகள் வீழ்ந்தனர்
பின்னர் ஆனந்தும், கார்ல்சனும் தங்களுடைய ரூக்கிற்கு (யானை) முன்னால் இருந்த சிப்பாயை முன்னோக்கி நகர்த்தினர். இருவரும் வெவ்வேறு திசைகளில் தங்களை வலுப்படுத்தியபோது, ஆனந்துக்கு சிறிது சாதகமான நிலை ஏற்பட்டது. அதனால் கார்ல்சனுக்கு நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 17-வது நகர்த்தலில் கார்ல்சன் தனது ராணியின் மூலம் ஆனந்தின் ராணி மற்றும் சிப்பாய் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் கொடுத்தார்.
அப்போது தனது ராணியால் கார்ல்சனின் ராணி்யை வெட்டாவிட்டால், தனது சிப்பாய் ஒன்றினை இழக்க நேரிடும் என்பதை உணர்ந்த ஆனந்த், ராணிக்கு ராணியை வெட்டி ஆட முடிவு செய்தார். அதன்படி கார்ல்சனின் ராணியை வெட்டினார். அடுத்த நகர்த்தலில் கார்ல்சன் தனது சிப்பாயால் ஆனந்தின் ராணியை வீழ்த்தினார்.
25-வது நகர்த்தலில் டிரா
ஆனால் 23-வது நகர்த்தலில் இருவருக்கும் கடுமையான சிக்கல் ஏற்பட்டது. அதனால் 25-வது நகர்த்தல் வரை ஆனந்த் தனது யானையையும், கார்ல்சன் தனது ராஜாவையும் நகர்த்திய கட்டத்திற்கே மீண்டும் மீண்டும் நகர்த்தினர்.
செஸ் விதிமுறைப்படி ஒரு காயை
தொடர்ந்து 3 முறை நகர்த்திய கட்டத்திற்கே நகர்த்தினால் போட்டியை டிராவில் முடிக்கலாம். அதனடிப்படையில் இருவரும் போட்டியை டிராவில் முடித்துக் கொண்டனர். போட்டிக்குப் பிறகு ஆனந்த் கூறுகையில், “கார்ல்சன் முதலில் சிப்பாயை நகர்த்திய விதத்தைப் பார்த்து கொஞ்சம் ஆச்சரியமடைந்தேன். இந்த ஆட்டம் மிக விரைவான ஆட்டமாக அமைந்தது. 12-வது நகர்த்தலுக்குப் பிறகு போட்டி கடும் சவாலாக இருந்தது. இதற்கு முன்னரும் இதேபோன்ற சவால்களை சந்தித்திருக்கிறேன். உண்மையிலேயே போட்டி இவ்வளவு சவாலாக அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் ஒருமுறை டிரா செய்ததற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் போட்டிகள் நீண்ட நேரம் நடைபெறும் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.
கார்ல்சன் பேசுகையில், “முதல் காய் நகர்த்தலை பற்றிப் பேச எதுவும் இல்லை. எனது கேன்டிடேட் போட்டியில் (உலக செஸ் போட்டியில் நடப்பு சாம்பியனை எதிர்த்து விளையாடுவதற்கான தகுதிச்சுற்று) இதேபோன்று முதல் காயை நகர்த்தியிருக்கிறேன்” என்றார்.