கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கிப் போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டங்களில் பெங்களூரு, ஒடிசா அணிகள் வெற்றி பெற்றன.
கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில், லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 9-வது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் கோவில்பட்டியில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது.
4-ம் நாளான நேற்று காலை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு ஆர்மி லெவன் - மகாராஷ்டிரா போலீஸ் அணிகள் மோதின. இதில் பெங்களூரு ஆர்மி லெவன் அணி 7- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மாலையில் நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா கிழக்கு கடற்கரை ரயில்வே - ஹாக்கி பெங்களூரு அணிகள் மோதின. இதில் ஒடிசா கிழக்கு கடற்கரை ரயில்வே அணி 3- 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் தெற்கு மத்திய ரயில்வே செகந்திராபாத் - டெல்லி மத்திய தலைமைச் செயலக அணிகள் மோதின. இதில் 6-2 என்ற கோல் கணக்கில் செகந்திராபாத் அணி வெற்றி பெற்றது.
இன்றைய ஆட்டம்
இன்று காலை 6.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மகாராஷ்டிரா போலீஸ் - ஹாக்கி புதுச்சேரி அணிகளும், மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஆர்மி லெவன் - லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணிகளும், 6.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தெற்கு மத்திய ரயில்வே செகந்திராபாத் - இம்.எம்.இ.கார்ப்ஸ் ஜலந்தர் அணிகளும், இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்திய கப்பற்படை மும்பை - கனரா வங்கி பெங்களூரு அணிகளும் மோதுகின்றன.