விளையாட்டு

உலக செஸ் போட்டி: ஆனந்தை வீழ்த்தி கார்ல்சன் மீண்டும் சாம்பியன்

செய்திப்பிரிவு

ஆனந்த்-கார்ல்சன் இடையே நேற்று நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 11-வது சுற்று ஆட்டம் மிக பரபரப்பாக நடந்தது. இதில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

ரஷ்யாவின் சூச்சியில் உலக செஸ் போட்டி நடந்து வருகிறது. 10-வது சுற்றின் முடிவில் ஆனந்தை விட ஒரு புள்ளி கூடுதலாகப் பெற்று 5.5 - 4.5 என முன்னிலை பெற்றிருந்தார் கார்ல்சன்.

எனவே நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டால் உலக சாம்பியன் ஆகிவிடலாம் என்கிற பரபரப்பான நிலையில், வெள்ளை நிறக் காய்களுடன் ஆடினார் கார்ல்சன். பெர்லின் முறையில் ஆட்டம் தொடங்கியது. இந்தமுறை 8-வது நகர்த்தலிலேயே இருவருடைய ராணிகளும் வெளியேறின.

ஆரம்பத்தில் ஆனந்தின் தயாரிப்பின்படி ஆட்டம் தொடர்ந்ததால் சில சமயம் கார்ல்சன் மிகவும் யோசித்து காய்களை நகர்த்தினார். அப்போது “அரங்கில் சுமாராக 15 பேர் இருக்கிறார்கள். பத்திரிகையாளர்களோடு ஒப்பிட்டால் அவர்களின் பங்கு 1/3 தான்” என்று முன்னாள் செஸ் வீரர் தர்ஜீ ஸ்வென்சன் ட்வீட் செய்தார்.

20-வது நகர்த்தலின்போது கார்ல்சன் தாக்குதல் செய்வதற்கான திட்டங்களுடன் நகர்ந்துகொண்டிருந்தார். ஆனால் ஆனந்த் மிகவும் கவனமாக ஆடியதால் 26-வது நகர்த்தலின்போது ஆதாயம் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகின. ஆட்டம் மிகவும் சுவாரஸ்யமாக நகர்ந்தது.

ஆனால் ஆனந்தின் 27-வது நகர்த்தல் (Rb4) மிகத் தவறானது என்று வர்ணிக்கப்பட்டது. அடுத்த நகர்த்தலில் ஒரு யானையை இழந்தார் ஆனந்த்.

இறுதியில் ஆனந்தின் தவறான ஒரு நகர்த்தலால் கார்ல்சனின் வெற்றிவாய்ப்பு பிரகாசமானது. தொடர்ந்து ஆனந்தை நெருக்கடிக்கு தள்ளிய கார்ல்சன் வெற்றி பெற்றார். கார்ல்சன் 6.5 புள்ளிகளுடனும், ஆனந்த் 4.5 புள்ளிகளுடனும் இந்த சாம்பியன்ஷிப் போட்டியை முடித்தனர்.

SCROLL FOR NEXT