விளையாட்டு

மியாமி ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்; சானியா மிர்சா ஜோடி தோல்வி

செய்திப்பிரிவு

மியாமி ஓபன் டென்னிஸில் ஸ்பெயினின் ரபேல் நடாலை வீழ்த்தி பட்டம் வென்றார் ரோஜர் பெடரர். மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் சானியா மிர்சா ஜோடி தோல்வியடைந்தது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்ற இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபேல் நடாலை எதிர்த்து விளையாடினார். இதில் பெடரர் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த ஆண்டில் அவர் வெல்லும் 3-வது கோப்பை இதுவாகும். 35 வயதான பெடரர், கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றிருந்தார். அதன் பின்னர் இரு வாரங்களுக்கு முன்பு இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்ற பிஎன்பி பரிபாஸ் தொடரிலும் கோப்பை வென்றிருந்தார். இந்த மூன்று தொடர்களிலும் நடாலை, பெடரர் வீழ்த்தி உள்ளார்.

அதேவேளையில் மியாமி ஓபன் பட்டம் நடாலுக்கு இந்த முறையும் கனவாக அமைந்தது. இந்த தொடரில் 5 முறை பங்கேற்ற நடால் ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. மேலும் இந்த ஆண்டில் 3 இறுதிப் போட்டிகளில் நடால் தோல்வியை சந்தித்துள்ளார்.

வெற்றி குறித்து பெடரர் கூறும் போது, “கடந்த சில வாரங்கள் அற்புதமாக அமைந்தது. மே மாதம் நடைபெற உள்ள பிரெஞ்சு ஓபன் போட்டிக்கு முன்ன தாக களிமண் தரை ஆட்டங்களில் நான் விளையாடப் போவதில்லை. எனக்கு ஒன்றும் 24 வயதில்லை. தற்போது பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன” என்றார்.

மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைகோவா ஜோடி அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்த ஜோடி 4-6, 3-6 என்ற நேர் செட்டில் தரவரிசை பட்டியலில் இடம் பெறாத கனடாவின் கபேரியலா டப்ரோவ்ஸ்கி, சீனாவின் யிபான் ஜோடியிடம் தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்த ஆண்டில் 3-வது பட்டம் வெல்லும் சானியா ஜோடியின் கனவு கலைந்தது.

தரவரிசையில் முன்னேற்றம்

மியாமி ஓபனில் பட்டம் வென்றதன் மூலம் டென்னிஸ் தர வரிசை பட்டியலில் ரோஜர் பெடரர் இரு இடங்கள் முன்னேறி 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் 3 இடங்களில் முறையே ஆன்டி முர்ரே, ஜோகோவிச், வாவ்ரிங்கா உள்ளனர். நடால் 5-வது இடத்தில் உள்ளார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசை பட்டியலில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். செரீனா வில்லியம்ஸ் 2-வது இடத்தில் உள்ளார். மியாமி ஓபனில் பட்டம் வென்ற இங்கிலாந்தின் ஜொஹன்னா கோன்டா 4 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

SCROLL FOR NEXT