ஐபிஎல் தொடரில் நேற்று புனேவில் நடைபெற்ற ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கவுதம் காம்பீர் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த புனே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 37 பந்து களில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி களுடன் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ரஹானே 46, ராகுல் திரிபாதி 38, டேன் கிறிஸ்டியன் 16 ரன்கள் சேர்த்தனர். தோனி அதிரடியாக விளையாடி 11 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 23 ரன்கள் விளாசிய நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். கொல்கத்தா அணி தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.
இதையடுத்து 183 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணி பேட் செய்தது. தொடக்க வீரரான சுனில் நரேன் 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதையடுத்து காம்பீ ருடன் இணைந்த ராபின் உத்தப்பா அதிரடியாக விளையாடினார். வாஷிங்டன் சுந்தர் வீசிய 8-வது ஓவரில் உத்தப்பா ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இந்த ஓவரில் 20 ரன்கள் விளாசப்பட்டது.
அதிரடியாக விளையாடிய உத்தப்பா 26 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 101 ரன்கள் குவித்தது. இம்ரன் தகிர் வீசிய 14-வது ஓவரில் சிக்ஸர் விளாசிய காம்பீர் 35 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப் பட்ட நிலையில் உனத்கட் பந்தில், உத்தப்பா ஆட்டமிழந்தார். அவர் 47 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் விளாசினார். கிறிஸ்டியன் வீசிய அடுத்த ஓவரில் காம்பீர் ஆட்ட மிழந்தார். அவர் 46 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்தார்.
கொல்கத்தா அணி 18.1 ஓவர் களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டேரன் பிராவோ 6 ரன்களும், மணீஷ் பாண்டே ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழக் காமல் இருந்தனர். கொல்கத்தா அணிக்கு இது 6-வது வெற்றியாக அமைந்தது. அதேவேளையில் புனே அணி 4-வது தோல்வியை சந்தித்தது.