3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது. முன்னதாக நியூஸிலாந்து அணி மும்பை அணிக்கு எதிராக 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்த பயிற்சி ஆட்டம் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
இதையொட்டி நியூஸிலாந்து அணி வீரர்கள் நேற்று பெரோஷா கோட்லாவில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர். அதிலும் முக்கியமாக சுழற்பந்து வீச்சாளர்களான மார்க் கிரெய்க், மிட்செல் சான்ட்நெர், இஷ் சோதி ஆகியார் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக வலையில்
‘எஸ்ஜி’ வகை பந்துகளில் பயிற்சி மேற்கொண்டனர். பயிற்சியின் போது புதிய மற்றும் பழைய பந்துகளை பயன்படுத்தினர்.
அணியின் கேப்டன் வில்லியம்சன் இந்த 3 சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நீண்ட நேரம் பேட் செய்தார். இது தவிர மற்ற வலை பயிற்சி, பந்து வீச்சாளர்களின் பந்துகளையும் வில்லியம்சன் சந்தித்தார்.
பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்த வலைகளில் இரு வலையில் பிரத்யேகமாக மெதுவாக பந்து வீசும் வீரர்களுக்கு எதிராக நியூஸிலாந்து வீரர்கள் பேட் செய்தனர். டிம் சவுத்தி, டிரென்ட் பவுல்ட், நெய்ல் வாக்நெர் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் பந்து வீச்சு பயிற்சியில் கலந்துகொண்டனர்.