உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தக்கவைத்துக் கொள்வதற்கு வியாழக்கிழமை நடைபெறும் 9-வது சுற்றே கடைசி வாய்ப்பாகும்.
நடப்பு சாம்பியன் ஆனந்த்-உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் இடையிலான உலக செஸ் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் 8 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் கார்ல்சன் 5 புள்ளிகளுடனும், ஆனந்த் 3 புள்ளிகளுடனும் உள்ளனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை நடைபெறும் 9-வது சுற்றில் வென்றால் மட்டுமே ஆனந்த் வெற்றிப் பாதைக்கு திரும்பமுடியும்.
இந்த சுற்றில் வெள்ளைக் காயுடன் களமிறங்கும் ஆனந்த், வெற்றி வாய்ப்பை தவறவிடும் பட்சத்தில் அது கார்ல்சனுக்கு சாதகமாகிவிடும்.
ஒரு வேளை இந்த சுற்று டிராவானால், எஞ்சிய சுற்றுகளில் ஆனந்த் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். மாறாக ஆனந்த் தோற்றால், 10-வது சுற்றில் கார்ல்சன் டிரா செய்தாலே உலக சாம்பியனாகிவிடலாம்.
கார்ல்சன் முன்னிலையில் உள்ளதால் அவர் எவ்வித பதற்றமுமின்றி விளையாடி வருகிறார். அதேநேரத்தில் இரு தோல்விகளைச் சந்தித்த ஆனந்த், கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளார்.