தஞ்சையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் சென்னை, காஞ்சிபுரம் அணிகள் வெற்றி பெற்றன.
தஞ்சாவூர் மாவட்ட கைப்பந்துக் கழகத்தின் 40-வது மாநில அளவிலான இளையோர் ஆண்கள், பெண்களுக்கான மின்னொளி கைப்பந்துப் போட்டி தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 4 நாள்கள் நடைபெற்றன.
இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்கள் பிரிவில் 26 அணிகளும், பெண்கள் பிரிவில் 20 அணிகளும் பங்கேற்றன. ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் காஞ்சிபுரம், சென்னை அணிகள் மோதின.
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் காஞ்சிபுரம் அணி 25-17, 25-21, 25-21 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. 3-வது இடத்தை நாகை அணியும், 4-வது இடத்தை மதுரை அணியும் பிடித்தன.
பெண்கள் பிரிவில் திருவாரூர், சென்னை அணிகள் மோதின. இதில் முதல் 2 செட்களை திருவாரூர் அணி கைப்பற்றியது.
ஆனால், சென்னை அணி அடுத்த 3 செட்களையும் கைப்பற்றி, 20-25, 25-27, 25-22, 25-19, 15-12 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. ஈரோடு அணி 3-வது இடத்தையும், காஞ்சிபுரம் அணி 4-வது இடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக மாவட்டச் செயலருமான எஸ்.எஸ். பழநிமாணிக்கம், தமிழக முன்னாள் அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா ஆகியோர் கோப்பைகளை வழங்கினர்.
விளையாட்டு அலுவலர் காந்தி, உடற்கல்வி ஆசிரியர் ரவிச்சந்திரன், மாவட்ட கைப்பந்துக் கழக இணைச் செயலர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.