மகளிர் 29 இஆர் பாய்மர படகுப் போட்டியில் இந்தியாவின் வர்ஷா கௌதம்-ஐஸ்வர்யா நெடுஞ்செழியன் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது. இவர்கள் இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜோடி மொத்தம் 12 ரேஸ்களில் பங்கேற்றது. இதில் ஒரு ரேஸில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மொத்தம் 25 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியிருக்கிறது தமிழக ஜோடி. தேசிய இன்ஸ்டிடியூட் ஓபன் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார் வர்ஷா. ஐஸ்வர்யா, சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவ கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்திய அணியின் மேலாளர் கே.டி.சிங் கூறுகையில், “ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் பாய்மர படகுப் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் முதல் பதக்கம் இது. அதனால் மகிழ்ச்சியே. ஆரம்பத்தில் காற்று சரியான அளவில் இல்லை. அதனால் போட்டி தள்ளி வைக்கப்பட்டது” என்றார்.
பதக்கம் வென்றது குறித்து ஐஸ்வர்யாவின் தாய் விஜயலட்சுமி கூறுகையில், “வர்ஷா-ஐஸ்வர்யா பங்கேற்ற பிரிவு இந்த முறைதான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சேர்க்கப்பட்டது. முதல்முறையாக சேர்க்கப்பட்ட பிரிவில் இருவரும் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெறுவதற்காக தீவிரமாக முயற்சித்து வரும் ஐஸ்வர்யா-வர்ஷா ஜோடிக்கு இந்த பதக்கம் நம்பிக்கையளிப்பதாக அமையும் என நம்புகிறேன். இருவரும் கடுமையாக உழைத்தனர். அதற்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. எங்கள் மகள் இந்தியாவுக்காக பதக்கம் வென்றிருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. ஐஸ்வர்யா சாதிப்பதற்கு அவருடைய பயிற்சியாளர் பீட்டர், அமிஷ் ஆகியோரின் பயிற்சி மிக உதவியாக இருந்தது. அவர்களுக்கு இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
வர்ஷாவின் தந்தை கௌதம் கூறுகையில், “பதக்கம் வெல்வார் என எதிபார்த்தேன். அது இப்போது நடந்துவிட்டது. சற்று முன் என்னிடம் பேசி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் வர்ஷா. காற்று சரியாக வீசாததால் வெள்ளிப் பதக்கத்தை இழக்க நேரிட்டதாக தெரிவித்தார். எனினும் வெண்கலம் வென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.