விளையாட்டு

ஆஷஸ் 5-வது டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலியா வெற்றி

செய்திப்பிரிவு

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. பங்கேற்ற 5 போட்டிகளிலும் தோல்வியடைந்து இங்கிலாந்து “வொயிட் வாஷ்” ஆனது.

இரு அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி ஆட்டத்தின் மூன்றாவதுநாளான நேற்றே முடிவுக்கு வந்துவிட்டது. இதில் ஆஸ்திரேலியா 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 326 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 276 ரன்களும் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து இரு இன்னிங்ஸ்களிலுமே மோசமாக பேட்டிங் செய்தது.

முதல் இன்னிங்ஸில் 155 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அந்த அணியால், இரண்டாவது இன்னிங்ஸில் 166 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 281 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததுடன், டெஸ்ட் தொடரையும் முழுமையாக இழந்தது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் 381 ரன்களிலும், அடிலெய்டில் நடைபெற்ற 2-வது டெஸ்ட்டில் 218 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடைபெற்ற 4-வது டெஸ்ட்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

முன்னதாக போட்டியின் 3-வது நாளான நேற்று 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 276 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் தொடக்க வீரர் ரோஜர்ஸ் அதிகபட்சமாக 119 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 448 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இங்கிலாந்து தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸை போலவே 2-வது இன்னிங்ஸிலும் இங்கிலாந்து வீரர்கள் மோசமாக பேட் செய்து விரைவில் விக்கெட்டுகளை இழந்தனர்.

தொடக்க வீரர் கேர்பெர்ரி மட்டும் சற்று தாக்குப் பிடித்து விளையாடி 43 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஸ்டுவர்ட் பிராட் 42 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. இதனால் 31.4 ஓவர்களில் 166 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியில் ஹாரீஸ் 5 விக்கெட்டுகளையும், ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் ஹாரீஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த ஆஷஸ் தொடரில் அவர் மொத்தம் 37 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

SCROLL FOR NEXT