ஒருநாள் கிரிக்கெட்டை வழக்கொழிந்த பாணியில் பாகிஸ்தான் ஆடுவதுதான் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அந்த அணி நேரடியாக தகுதி பெறுவதற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளதாக பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் சாடியுள்ளார்.
8 அணிகள் தானாகவே தகுதி பெறும் நிலையில் 2 அணிகள் தகுதி பெறுவதற்காக நடைபெறும் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் அசோசியேட் அணிகளுடன் மோத வேண்டிய நிலை ஏற்படுமானால் அது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இழுக்காகும் என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 9-ம் இடத்தில் உள்ளது. தங்களது நிலையை பாகிஸ்தான் உயர்த்திக் கொள்ள செப்டம்பர் 30, 2017 வரையே கால அவகாசம் உள்ளது, இந்தக் காலக்கட்டத்தில் 14 ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் ஆட வேண்டியுள்ளது. இதில் பாகிஸ்தான் தங்களது தரநிலையை உயர்த்தவில்லையெனில் ஏப்ரல் 2018-ல் நடைபெறும் 10 அணிகள் மோதும் தகுதிச் சுற்றில் பாகிஸ்தான் ஆடி உலகக்கோப்பைக்குத் தகுதி பெற வேண்டும். தகுதிச் சுற்று ஆட்டங்களில் ஆடுவதற்கான எனர்ஜி மட்டம் எந்த அளவுக்கு அப்போதைய பாகிஸ்தான் அணிக்கு இருக்கும் என்பதும் புரியாத புதிராகவே உள்ளது.
இந்நிலையை உணர்ந்துள்ள பாகிஸ்தான் பயிற்சியாளர் கூறும் போது, “நான் எதார்த்தமாக யோசிக்க வேண்டும். எங்களுக்கு போதிய காலநேரம் இல்லை. இப்போதிலிருந்தே நாங்கள் பயணத்தை தொடங்குவது அவசியம். தற்போது பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடும் விதம் வழக்கொழிந்த பழைய பாணி ஆட்டமாக உள்ளது. இனி இந்த மாதிரி கிரிக்கெட்டை ஆட முடியாது, தைரியமாக ஆட வேண்டிய தருணம் வந்து விட்டது. ஒவ்வொரு போட்டியிலும் ஆக்ரோஷம் உச்சத்திற்குச் செல்ல வேண்டும்.
ஆகவே மீண்டும் மீண்டும் அதே வீரர்களைத் தேர்வு செய்வது வேலைக்குதவாது. தற்போது 9-ம் நிலையில் உள்ளோம், இனி இழப்பதற்கு புதிதாக ஒன்றுமில்லை. சில வீரர்கள் மீது முதலீடு செய்தேயாக வேண்டும். இங்கிலாந்தில் முதல் ஒருநாள் போட்டியிலிருந்து 5-ம் போட்டி வரை நாங்கள் ஒட்டுமொத்தமாக விளையாடும் முறையை மாற்றியுள்ளோம்.
ஆக்ரோஷமான கிரிக்கெட்டை ஆட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இத்தகைய கிரிக்கெட்தான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும், வீரர்களையும் ஊக்குவிக்கும்.
பாகிஸ்தான் ரசிகர்களுக்காக எங்களுக்கு நிறைய பொறுப்பு உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதனை சரியான முறையில் அமைத்துக் கொள்வதற்கான பெரிய பொறுப்பு எனக்குள்ளது. எனவே சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வீரர்களுக்கும் இது தெரியும். நான் அவர்களிடம் நேரடியாகப் பேசினேன். மீண்டும் ஒரு முறை உடல் தகுதி சரியில்லாமல் ஆட வந்தால் இனி விளையாடவே முடியாது என்று கூறிவிட்டேன்.
மொகமது இர்பானின் இப்போதைய உடல் தகுதி ஒருநாள் போட்டிகளுக்கு உகந்ததல்ல, ஆனால் அவர் ஆட வந்தார். இதில் சொந்தமாக எனக்கு எதுவும் இல்லை. நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். நாம் தரநிலைகளை அமைக்க வேண்டும். ஒருநாள், டி20 கிரிக்கெட்டுக்கு வரும் ஒவ்வொரு வீரரும் தரநிலையில் குறைவாக இருப்பது நல்லதல்ல” என்றார் மிக்கி ஆர்தர்.