ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க வீரரான ரோஹித் சர்மா, வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். மணீஷ் பாண்டேவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் குல்தீப் யாதவ், சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், ஷர்துல் தாக்குர் ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ரோஹித் சர்மா கடந்த ஆண்டு இறுதியில் நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரின் போது தொடை பகுதியில் காயம் அடைந்தார். இதற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரின் கடைசி கட்டத்திலும், தற்போது ஐபிஎல் தொடரிலும் விளையாடி வருகிறார்.
26 வயதான முகமது ஷமி, கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடினார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் தற்போது குணமடைந்துள்ள நிலையில் விஜய் ஹசாரே தொடரில் இரு ஆட்டங்களில் விளையாடினார்.
தொடர்ந்து ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக 5 ஆட்டங் களில் பங்கேற்றுள்ளார். இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் 5 வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவராக ஷமியும் இடம் பிடித்துள்ளார். விராட் கோலி தலைமையிலான அணியில் கூடுதல் பேட்ஸ்மேனாக மணீஷ் பாண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வீரர்கள் தேர்வு குறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியதாவது: இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி உள்ளூர் தொடரை வென்றதால் அதே அணியை நம்பிக்கையுடன் தேர்வு செய்துள்ளோம். அணி தேர்வின் போது குல்தீப் யாதவ் பெயரையும் பரிசீலனை செய்தோம்.
அவர் ஒரு ஆச்சர்யமான தேர்வாக இருந்திருப்பார். ஆனால் நாம் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவோமா என்பதே சந்தேகம். யுவராஜ் சிங், கேதார் ஜாதவ் ஆகியோரும் சுழற்பந்து வீசக்கூடியவர்கள் என்பதால் குல்தீப் யாதவால் அணியில் இடம் பெற முடியாமல் போனது.
ஐபிஎல் தொடரை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் தற்போது நடைபெற உள்ளது நீண்ட வடிவிலான போட்டி. இங்கிலாந்தில் நிலவும் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டே அணியை தேர்வு செய்துள்ளோம்.
பெரிய அளவிலான தொடருக்கு அணியை தேர்வு செய்யும் போது ஐபிஎல் தொடரின் திறமையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் கடந்த ஒரு வருட திறனையும் மதிப்பீடு செய்துள்ளோம். அணித் தேர்வில் எந்தவித ஆச்சர்யமும் இல்லை.
கடந்த 4 மாதங்களாகவே அணி சிறந்த வடிவத்துடன் உள்ளதால் அணித் தேர்வு எளிதாகவே இருந்தது. தற்போதைய அணி மிகச்சிறந்தது. மூத்த வீரர் கவுதம் காம்பீரைத் தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கவில்லை.
தற்போதைய நிலையில் தொடக்க வீரர்களாக ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஆகியோரைத் தேர்வு செய்துள்ளோம். மாற்று தொடக்க வீரராக ரஹானே உள்ளார். அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள அஸ்வின் உடல் தகுதி பெற்றுவிட்டார்.
அவரது காயம் பெரிய அளவில் இல்லையென்றாலும் ஓய்வு தேவைப்பட்டதாலேயே ஐபிஎல் தொடரில் அவர் கலந்து கொள்ள வில்லை. எங்களது அறிவுரையை ஏற்றே புனே அணியும் அவருக்கு ஓய்வு கொடுத்தது. சிகிச்சைக்கு பின்னர் அஸ்வின், உடற் பயிற்சிகளைத் தொடங்கிவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜூன் 1-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பரம வைரியான பாகிஸ்தானை 4-ம் தேதி எதிர்த்து விளையாடுகிறது. 8-ம் தேதி இலங்கையையும், 11-ம் தேதி தென் ஆப்பிரிக்காவையும் இந்திய அணி சந்திக்கிறது.
இந்திய அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, யுவராஜ் சிங், தோனி, கேதார் ஜாதவ், மணீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார்.
மாற்று வீரர்கள்:
குல்தீப் யாதவ், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஷர்துல் தாக்குர், சுரேஷ் ரெய்னா