ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், ரபேல் நடால் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
மெல்போர்னில் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 9-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 24-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் அலெக்சாண்டரை எதிர்த்து விளையாடினார். இதில் நடால் 4-6, 6-3, 6-7, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் சுமார் 4 மணிநேரம் 5 நிமிடங்கள் போராடி வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டங்களில் 8-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் 6-1, 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்சின் பெனோயிட் பேரையும், 6-ம் நிலை வீரரான பிரான்சின் கெல் மோன்பில்ஸ் 6-3, 7-6, 6-4 என்ற நேர் செட்டில் 32-ம் நிலை வீரரான ஜெர்மனியின் ஹோல்ஸ்செரிபரையும், 3-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிக் 6-2, 7-6, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் 25-ம் நிலை வீரரான பிரான்சின் சிமோனையும்,
13-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ராபேர்ட்டா பவுதிஸ்டா அகுட் 7-5, 6-7, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் 21-ம் நிலை வீரரான ஸ்பெயினின் டேவிட் பெரரையும் வீழ்த்தி 4-வது சுற்றில் நுழைந்தனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-3 என்ற நேர் செட்டில் சகநாட்டை சேர்ந்த நிக்கோல் கிப்ஸை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
9-ம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தின் ஜோகன்னா ஹொன்டா 6-3, 6-1 என்ற நேர் செட்டில், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியை தோற்கடித்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி 7-5, 6-4 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் லாரா ஷெய்ஜ்முன்ட், குரோஷியாவின் பாவிச் ஜோடியை வீழ்த்தியது.
மற்றொரு ஆட்டத்தில் கனடா
வின் கேபரிலா டப்ரோவ்ஸ்கி, இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி 6-4, 6-7, 10-7 என்ற செட் கணக்கில் சுலோவேனியாவின் கேத்ரினா செர்போட்னிக், நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியை வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.