எனது காலத்தில் கிரிக்கெட் விளையாடியவர்களில் சச்சின் டெண்டுல்கர் மகத்தானவர் என்று முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளீதரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சச்சின் ஓய்வு பெற்றுள்ள இந்தத் தருணத்தில் முரளீதரன் மேலும் கூறியிருப்பதாவது:
நவீனகால கிரிக்கெட்டில் சச்சின் மிகச்சிறந்த வீரர். ஒவ்வொரு போட்டிக்கு முன்னதாகவும் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டதோடு கிரிக்கெட்டை மிகவும் நேசித்தவர். அதுதான் அவரை மிகச்சிறந்த வீரராக உருவாக்கியிருக்கிறது. 1992-ல் நான் விளையாட ஆரம்பித்தேன். அதுமுதல் தற்போது வரையில் நான் பார்த்த வீரர்களில் மகத்தான் வீரர் சச்சின்தான்.
மற்றவர்கள் விளையாடியதை நான் பார்த்ததில்லை. பிராட்மேனின் ஆட்டத்தையும் பார்த்ததில்லை. சராசரி என்று எடுத்துக்கொண்டால் அதில் சிறந்தவர் பிராட்மேன்தான். சாதனைகள் என்று எடுத்துக் கொண்டால், அதில் சிறந்தவர் சச்சின்தான். அவர் அதிக ரன்களைக் குவித்துள்ளதோடு, நீண்டகாலம் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்.
அதனால்தான் என்னுடைய காலத்தில் விளையாடியவர்களில் அவர் மகத்தான் வீரராக இருக்கிறார். அவரைப் போன்று யாரும் நீண்ட காலம் கிரிக்கெட் விளையாட முடியாது. சச்சின் ஆச்சர்யமான மனிதர். 24 ஆண்டுகளுக்கு முன்பு நான் அவரை சந்தித்தபோது எப்படியிருந்தாரோ அதேபோன்றுதான் இப்போதும் இருக்கிறார் என்றார்.
1993-ல் முதல்முறையாக சச்சினுக்கு எதிராக விளையாடியது குறித்துப் பேசிய முரளீதரன், “கிரிக்கெட் மீதான சச்சினின் காதலும், அர்ப்பணிப்பும் என்னை கவர்ந்தது. கிரிக்கெட்டில் அவருடைய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவர் ஒரு ஜென்டில்மேனைப் போன்று விளையாடினார். கண்ணியமுடன் செயல்பட்டார். ஜென்டில்மேன்களின் விளையாட்டான கிரிக்கெட்டில் சச்சின் 24 ஆண்டுகள் விளையாடியதே அவருடைய சாதனைகளைப் பற்றி சொல்லும். அவர் எப்போதுமே பணிவாகவும், அமைதியாகவும் இருக்கக்கூடியவர்” என்றார்.
இந்தியாவின் அடுத்த சச்சின் விராட் கோலி என எல்லோரும் கூறி வரும் வேளையில், சச்சினோடு கோலியை ஒப்பிடக்கூடாது எனக் கூறிய முரளீதரன், “இரு விஷயங்கள் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. இந்தியாவுக்கு அடுத்த சச்சின் கிடைத்துவிட்டார் எனக்கூறுவதற்கு இது சரியான நேரமில்லை. அதற்கு காலம்தான் பதில் சொல்லும். சச்சின் மகத்தான் வீரராக உருவெடுக்க 24 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். கோலி இப்போதுதான் விளையாட ஆரம்பித்துள்ளார்” என்றார்.
அனைத்து ஆடுகளங்களிலும் அனைத்துவிதமான பந்துவீச்சுக்கு எதிராகவும் சச்சின் சிறப்பாக விளையாடக்கூடியவர் எனக் கூறிய முரளீதரன், “அவரை வீழ்த்த எல்லா அணிகளுமே சிறப்பு வியூகம் வைத்திருக்கும். அவரை வீழ்த்துவது எப்போதுமே கடினமானது. அவருடைய விக்கெட் எங்களுக்கு மிக முக்கியமானது. அவரை எப்படி வீழ்த்துவது என அணியின் கூட்டத்தில் விவாதித்திருக்கிறோம். அவருடைய எதிர்காலம் சிறப்பானதாக அமைய என் வாழ்த்துகள். இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அவர் பயிற்சியளிக்க வேண்டும். அதைப் பார்க்க விரும்புகிறேன்.” என்றார்.