விளையாட்டு

தொடர்ந்து பல சதங்கள் அடிக்க வேண்டும் : தவாண் விருப்பம்

செய்திப்பிரிவு

சென்ற மார்ச் மாதம் இந்திய அணிக்குத் திரும்பியதில் இருந்து, ஷிகார் தவானின் ஆட்டம், உச்ச நிலையில் உள்ளது. இது தொடர வேண்டும் என்றும், பல சதங்கள் அடித்து, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தர விரும்புவதாகவும் தவாண் கூறியுள்ளார்.

கான்பூரில் நடைபெற்ற இன்றைய போட்டியில் இந்தியா வென்று, மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான இத் தொடரைக் கைப்பற்ற, தவாண் 95 பந்துகளில் குவித்த 119 ரன்கள் பக்க பலமாய் அமைந்தது.

அணிக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டதிலிருந்து இன்றுவரை, தனது முதல் டெஸ்ட் போடியில் அடித்த 187 ரன்களையும் சேர்த்து, தவாண் 6 சதங்களை அடித்துள்ளார்.

"இவ்வளவு அழகான ஒரு வருடத்தை அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். சதங்கள் அடிப்பது எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. இந்த நல்ல பழக்கத்தை கைவிடாமல், தொடர்ந்து சதங்கள் அடித்து இந்தியாவுக்கு பல வெற்றிகளைத் தேடித் தர வேண்டும்" என பத்திரிக்கையாளர் சந்திப்பில், தவாண் தெரிவித்தார். 23 பந்துகள் மீதமுள்ள நிலையிலேயே இந்தியா வெற்றி இலக்கை எளிதில் எட்டியது. தவானைப் பொருத்தவரை, இந்த சதத்தின் முக்கியத்துவம், அது அணியின் வெற்றிக்கு வழி வகுத்ததே.

"நான் சதம் அடித்து, அணி வெற்றியும் பெற்றது எனக்கு மன நிறைவைத் தருகிறது. கடந்த 2-3 ஆட்டங்களில் தொடக்கம் நன்றாக அமைந்தும், என்னால் பெரிய அளவில் ரன்கள் சேர்க்க முடியவில்லை. தொடரை முடிவு செய்யும் போட்டியில் சதம் அடித்தது பொருத்தமாக இருந்தது" என்றார்.

அடுத்து இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறது. கடினமான தொடராக இருக்கும் எனப் பலரும் நினைத்தாலும், அங்கும் சிறப்பாக விளையாடுவேன் என தவாண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

"தாய் மண்ணில் ஒரு தொடரை வெல்வது எப்போதுமே உற்சாகத்தைக் கொடுக்கும். அதே போல், எனது சதமும், தென் ஆப்பிரிக்காவில் எனக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கும்" என்று தவாண் கூறினார்.

SCROLL FOR NEXT