பிசிசிஐ-க்கு கோர்ட் நியமித்த புதிய நிர்வாககுழு, அதிகாரிகள் தங்கள் பணிகளைச் செய்ய விடாமல் முட்டுக்கட்டை இடுகின்றது என்று பிசிசிஐ இணைச் செயலர் அமிதாப் சவுத்ரி செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, அமர்வின் சக நீதிபதிகளான கான்வில்கர் மற்றும் சந்திராசூட் ஆகியோரை ஆலோசித்த பிறகு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தனர்.
அமிதாப் சவுத்ரி தன் மனுவில் கூறியிருப்பதாவது:
புதிய நிர்வாகக் குழு சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய வேண்டு என்றும் மூத்த துணை தலைவர் பிசிசிஐ தலைவர் செய்த பணிகளையும் இணைச் செயலர், செயலர் செய்த பணிகளையும் கவனிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
தற்போது புதிய நிர்வாகக் குழு கிரிக்கெட் வாரியம் தொடர்பான வழக்குகளைக் கையாள ராகுல் ஜோஹ்ரி என்பவரை நியமித்துள்ளது.
ஆனால் பிசிசிஐ விதிமுறையின் படி இத்தகைய சட்ட விவகாரங்களை செயலர்தான் கையாள வேண்டும் என்று கூறுகிறது. இதோடு மட்டுமல்லாமல் ஜூனியர் டீம் தேர்வு உட்பட பல நடவடிக்கைகளை புதிய நிர்வாகக் குழு செய்யவிடாமல் தங்களை தடுக்கிறது. விநோத் ராய் உள்ளிட்டோரின் புதிய நிர்வாகக் குழு நிரூபிக்கப்பட்ட தகுதி படைத்தவர்கள், ஆனால் கோர்ட் வழிமுறைகளை இவர்கள் கடைபிடிக்கவில்லை.
இவ்வாறு தன் மனுவில் கூறியிருந்தார்.
இதனையடுத்து இந்த மனுவை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.