2014-ம் ஆண்டுக்கான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வரும் டிசம்பர் 30-ம் தேதி தொடங்குகிறது. இதில் நடப்புச் சாம்பியனான செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச் மற்றும் இரு முன்னாள் சாம்பியன்கள் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு டென்னிஸ் சங்க பொதுச் செயலர் சி.பி.என்.ரெட்டி, ஐஎம்ஜி ரிலையன்ஸ் தலைமைச் செயல் அதிகாரி அசு ஜின்டால், ஏர்செல் விற்பனை பிரிவு தலைமை அதிகாரி அனுபம் வாசுதேவ் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:
2014-ம் ஆண்டுக்கான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி டிசம்பர் 30-ம் தேதி தொடங்கி ஜனவரி 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நடப்புச் சாம்பியன் ஜான்கோ டிப்சரேவிச், 2008 சென்னை ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ரஷியாவின் மிகைல் யூஸ்னி, 2011 சென்னை ஓபனில் பட்டம் வென்ற ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்களில் வாவ்ரிங்கா 6-வது முறையாக சென்னை ஓபனில் பங்கேற்கவுள்ளார்.
இவர்கள் தவிர சர்வதேச தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள இத்தாலியின் ஃபேபியோ ஃபாக்னி, தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ளவரும், கடந்த முறை அரையிறுதி வரை முன்னேறியவருமான பிரான்ஸின் பெனாய்ட் பேர், 32-வது இடத்தில் உள்ள கனடாவின் வசக் போஸ்பிஸில், 38-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர். இதனால் போட்டி கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றில் மொத்தம் 28 பேர் பங்கேற்கின்றனர். இதில் 21 பேர் தரவரிசையின் அடிப்படையில் பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். 4 பேர் தகுதிச்சுற்றின் மூலம் பிரதான சுற்றில் விளையாடத் தகுதி பெறுவர். 3 பேருக்கு வைல்ட்கார்ட் வழங்கப்படும். அது குறித்து டிசம்பர் 16-ம் தேதி முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். இதேபோல் தமிழக வீரர்கள் ஸ்ரீராம் பாலாஜி, ராம்குமார் ராமநாதன், ஜீவன் நெடுஞ்செழியன் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர் என்று அவர்கள் கூறினர்.