விளையாட்டு

செய்தித்துளிகள்: கேப்டன் பதவியில் அசார் அலி நீடிப்பு

செய்திப்பிரிவு

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டி தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. இதனால் ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் அசார் அலிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு டி 20 அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது பொறுப்பு வகிக்கக்கூடும் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அசார் அலியை மீண்டும் கேப்டனாக நியமித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அசார் அலி தலைமையில் பாகிஸ்தான் அணி 25 ஆட்டத்தில் 15 தோல்விகளை சந்தித்துள்ளது. மேலும் ஒருநாள் போட்டி தரவரிசையில் 9-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

**********

முதல் டெஸ்டில் நீஷம் விலகல்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் விலகியுள்ளார்.

பயிற்சியின்போது விலா எலும்பு பகுதியில் காயம் அடைந்ததால், கான்பூரில் நாளை தொடங்கும் முதல் டெஸ்டில் அவரால் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மும்பைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது நீஷம் பேட்டிங் செய்யவில்லை. 5 ஓவர்கள் மட்டுமே பந்துவீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 30-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவுள்ள 2-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னபாக நீஷம் உடற்தகுதி அடைந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

**********

அர்ஜுன் பாபுதாவுக்கு வெண்கலப் பதக்கம்

அஜர்பைஜானில் உள்ள கபாலாவில் ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலக்கோப்பை நடைபெற்று வருகிறது. இதன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் பாபுதா 183.6 புள்ளிகள் பெற்று வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இதே பிரிவில் செக்குடியரசின் பிலிப் 206.1 புள்ளி களுடன் தங்கப்பதக்கமும், ஜப்பான் வீரர் சிமாதா 205.2 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

SCROLL FOR NEXT