விளையாட்டு

தோனியை கேப்டனாக்க சச்சின்தான் பரிந்துரைத்தார்: சரத் பவார்

செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து திராவிட் விலக விரும்பியபோது தோனியை கேப்டனாக்க சச்சின் பரிந்துரைத்தார் என முன்னாள் பிசிசிஐ தலைவரும், மத்திய வேளாண்துறை அமைச்சருமான சரத் பவார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சரத் பவார் தனது வலைப்பூவில் மேலும் கூறியிருப்பதாவது: சச்சின் தனது சகவீரர்களுக்கு உதவக்கூடியவர். அதிலும் குறிப்பாக இளம் வீரர்களுக்கு உதவ வேண்டும் என விரும்புபவர். அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என நினைக்கக்கூடியவர்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த நானும் இங்கிலாந்து சென்றிருந்தேன். ஒருநாள் ராகுல் திராவிட் என்னிடம் வந்து ஒரு வேண்டுகோள் விடுத்தார். அது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கேப்டன் பதவி தனது ஆட்டத்தைப் பாதிப்பதால், அதிலிருந்து விலக விரும்புவதாக அவர் கூறினார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான் அதை ஏற்க முடியாது எனக் கூறினேன். விரைவில் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி தொடங்கவுள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் ஓர் ஆண்டுதான் உள்ளது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் கேப்டன் பதவியில் இருந்து விலகுவது குறித்து சிந்தித்தால் எப்படி? உங்களுக்கு அடுத்து யாரை கேப்டனாக நியமிப்பது என கேட்டபோது, சச்சினின் பெயரை திராவிட் பரிந்துரைத்தார். இது தொடர்பாக சச்சினிடம் பேசியபோது, அவர் கேப்டன் பதவியை ஏற்க தயாராக இல்லை. அதேநேரத்தில் தோனியை கேப்டனாக நியமிக்கலாம் என கூறினார்.

தோனி மிகச்சிறந்த விக்கெட் கீப்பர். ஆனால் அவரால் நல்ல கேப்டனாக செயல்பட முடியுமா என சச்சினிடம் கேட்டேன். அப்போது அவர் நீங்கள் முயற்சித்துப் பாருங்கள். அவர் மிகச்சிறந்த கேப்டனாக உருவெடுப்பார். இதை நான் பொறுப்புணர்ச்சியோடு சொல்கிறேன் என சச்சின் கூறினார்.

பிசிசிஐ தேர்வுக்குழுவினர் சரியான நேரத்தில் தோனியை கேப்டனாக தேர்வு செய்தனர். அவர் இப்போது இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்துள்ளார். அவர் தலைமையிலான இந்திய அணி இருபது ஓவர் உலகக் கோப்பையையும், 50 ஓவர் உலகக் கோப்பையையும் வென்றது. சச்சினின் தொலைநோக்கு பார்வையால்தான் இது நடந்தது. சச்சின் இப்போது ஓய்வு பெறவுள்ளார்.

ஆனாலும் அவரால் கிரிக்கெட்டிலிருந்து நீண்ட காலம் விலகியிருக்க முடியாது. ஓய்வுக்குப் பிறகு அவர் செய்ய திட்டமிட்டுள்ள விஷயங்களில் இளம் வீரர்களுக்கு பயிற்சியளிப்பதும் ஒன்றாக இருக்கும். அவர் வளமோடும், மகிழ்ச்சியோடும் இருக்க வாழ்த்துகள் என பவார் தனது வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT