ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 147 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜாகீர்கான் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் கிறிஸ் மோரிஸூக்கு பதிலாக மார்லன் சாமுவேல்ஸ் இடம் பெற்றார்.
ஜாகீர்கான் அணிக்கு திரும்பியதால் சபாஷ் நதீம் நீக்கப்பட்டார். மும்பை அணியில் ஜாஸ் பட்லர், கிருனல் பாண்டியா நீக்கப்பட்டு சிம்மன்ஸ், ஹர்பஜன் சிங் சேர்க்கப்பட்டனர்.
முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான சிம்மன்ஸ் 43 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 66 ரன்களும், பொலார்டு 35 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 63 ரன்களும் விளாசினர்.
ஹர்திக் பாண்டியா 14 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 29 ரன்களும், பார்த்தீவ் படேல் 25, ரோஹித் சர்மா 10 ரன்களும் சேர்த்தனர். டெல்லி அணி தரப்பில் ரபாடா, கோரே ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 213 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி அணி தொடக்கத்தில் இருந்து விக்கெட்களை சீரான இடைவெளியில் பறிகொடுத்தது.
சஞ்சு சாம்சன் 0, ஸ்ரேயஸ் ஐயர் 3, ரிஷப் பந்த் 0, கருண் நாயர் 21, கோரே ஆண்டர்சன் 10, சாமுவேல்ஸ் 1, கம்மின்ஸ் 10, ரபாடா 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். 48 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்த டெல்லி அணி தோல்வியின் பிடியில் இருந்து மீளமுடியாமல் போனது.
அடுத்து களமிறங்கிய முகமது சமி 7, ஜாகீர்கான் 2 ரன்களில் நடையை கட்ட முடிவில் டெல்லி அணி 13.4 ஓவர்களில் 66 ரன்களுக்கு சுருண்டது. மும்பை அணி தரப்பில் ஹர்பஜன் சிங், கரண் சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
மும்பை அணிக்கு இது 9-வது வெற்றியாக அமைந்தது. அதேவேளையில் டெல்லி அணி 7-வது தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்தது.