விளையாட்டு

ஊதிய விவகாரம்: மே.இ.தீவுகள் வீரர்கள் மிரட்டல்

செய்திப்பிரிவு

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஒப்பந்தப்படி வீரர்களுக்கு 75 சதவீதம் ஊதிய குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் கடும் அதிருப்தியடைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபடாததோடு, செய்தியாளர்கள் சந்திப்பையும் தவிர்த்தனர்.

மாலையில் நடைபெற்ற கோப்பை அறிமுக விழாவுக்கும் கேப்டன் பிராவோ வரவில்லை. மேலும் இந்தியாவுடனான தொடரை புறக்கணிக்கப் போவதாக மேற்கிந்தியத் தீவுகள் வாரியம், வீரர்கள் சங்கம் ஆகியவற்றுக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதியுள்ளனர். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் போட்டியை புறக்கணிக்கலாம் என்ற தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடைசியில் மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் டுவைன் பிராவோ டாஸ் போடுவதற்கு வந்ததன் மூலம் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதேநேரத்தில் இந்தப் போட்டியில் விளையாடினாலும் ஊதிய பிரச்சினையில் தீர்வு எட்டப்படும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்துக்கு கேப்டன் பிராவோ எழுதியுள்ள கடிதத்தில், “தீவிர பரிசீலனைக்குப் பிறகு முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்பது என முடிவு செய்துள்ளோம். அதற்காக புதிய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் இல்லை. முழு விவரம் இல்லாத, விதிகளை மீறிய எந்த ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டாவிட்டால் உரிய நடவடிக்கையில் இறங்கும் உரிமை எங்களுக்கு உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT