இண்டியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது. டிசம்பர் 20-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இப்போட்டி நடைபெறவுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் பாணியில் நடைபெறும் இப்போட்டியில் சென்னையின் எப்சி, அட்லெடிகோ கொல்கத்தா, எப்சி கோவா, எப்சி புனே சிட்டி, கேரள பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி எப்சி, நார்த் ஈஸ்ட் யுனைடெட், டெல்லி டைனமோஸ் எப்சி என 8 அணிகள் பங்கேற்கின்றன. இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா– மும்பை அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியை தொடங்கி வைக்கிறார். தொடக்க விழா பிரம்மாண்டமாக நடை பெறவுள்ளது. விழாவில் பாலிவுட் நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் தொழிலதிபர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். கிரிக்கெட் நட்சத்திரங்கள் சச்சின் டெண்டுல்கர், தோனி, கங்குலி, கோலி, ஹிந்தி திரைநட்சத்திரங்கள் அபிஷேக் பச்சன், ரன்பூர் கபூர், ஜான் ஆபிரஹாம் மற்றும் பிரபல தொழிலதிபர்கள் ஐஎஸ்எல் அணிகளை வாங்கியுள்ளனர்.
உலகின் முன்னணி கால்பந்து வீரர்கள் லுயஸ் கார்சி (ஸ்பெயின்), புருனோ (இத்தாலி), எலனோ ராபர்ட் பியர், டேவிட் டிரெஸ்கெட் (பிரான்ஸ்) உள்பட மொத்தம் 49 வெளிநாட்டு வீரர்கள் ஆடுகிறார்கள். மொத்தம் 61 ஆட்டங்கள் நடக்கின்றன. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் இப்போட்டி நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.