தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் விதமாக இரு அணிகள் இடையே 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் ஆட்டம் நேற்று முன்தினம் ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 339 ரன்கள் குவித்தது. தனது 10-வது சதத்தை விளாசிய கேப்டன் மோர்கன் 93 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் எடுத்தார்.
அலெக்ஸ் ஹேல்ஸ் 61, மொயின் அலி 77 ரன்கள் எடுத்தனர். ஜோ ரூட் 37, பென் ஸ்டோக்ஸ் 25, ஜாஸ் பட்லர் 7, கிறிஸ் வோக்ஸ் 6, ஜேசன் ராய் 1 ரன்கள் சேர்த்தனர். 34.1 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 198 ரன்கள் என்ற நிலையில் மோர்கனுடன் இணைந்து மொயின் அலி 6-வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்து வலுவான இலக்கை கொடுக்க உதவினார். கடைசி 10 ஓவர்களில் இங்கிலாந்து 102 ரன்கள் சேர்த்தது.
தென் ஆப்ரிக்க அணி தரப்பில் கிறிஸ் மோரிஸ், பெலுக்வயோ தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 340 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரரான குயிண்டன் டி காக் 5 ரன்களில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
எனினும் 2-வது விக்கெட்டுக்கு ஹசிம் ஆம்லாவுடன் இணைந்து டு பிளெஸ்ஸிஸ் சிறப்பாக பேட் செய்தார். பந்துகளுக்கு நிகராக ரன் சேர்த்த இவர்கள் அரை சதம் அடித்தனர். 24.3 ஓவர்களில் ஸ்கோர் 145 ஆக இருந்த போது இந்த ஜோடி பிரிந்தது. ஆம்லா 76 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்த நிலையில் மார்க் வுட் பந்தில் ஆட்டமிழந்தார்.
2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 112 ரன்கள் சேர்த்தது. சிறிது நேரத்திலேயே டு பிளெஸ்ஸிஸ் 61 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்த நிலையில் பிளங்கெட் பந்தில் வெளியேறினார். இதன் பின்னர் தென் ஆப்ரிக்க அணி சீரான இடைவேளையில் விக்கெட்களை இழந்தது.
டுமினி 15, டேவிட் மில்லர் 11, கிறிஸ்மோரிஸ் 5, கேப்டன் டி வில்லியர்ஸ் 45, பெலுக்வயோ 4, பார்நெல் 19, ரபாடா 19 ரன்களில் நடையை கட்ட 45 ஓவர்களில் தென் ஆப்ரிக்க அணி 267 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 மற்றும் அடில் ரஷித், மொயின் அலி தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகனாக மொயின் அலி தேர்வானார். 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன் னிலை வகிக்கிறது. 2-வது ஒருநாள் போட்டி சவுத்தாம்ப்டன் நகரில் நாளை நடைபெறுகிறது.