இந்தியா- மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 2-வது நாளான நேற்று முன் தினம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 161.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 566 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் விராட் கோலி 283 பந்துகளில், 24 பவுண்டரிகளுடன் 200 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
42 டெஸ்டில் விளையாடி உள்ள கோலியின் முதல் இரட்டை சதம் இதுவாகும். இதற்கு முன் 169 ரன்களே அவரது அதிகபட்சமாக இருந்தது. வெளிநாட்டில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையையும் கோலி பெற்றார். இதற்கு முன் நியூஸிலாந்தில், அசாருதின் 192 ரன்கள் குவித்ததே இந்திய கேப்டன்களில் அதிக பட்ச ரன்களாக இருந்தது.
அஸ்வின் 253 பந்தில், 12 பவுண்டரிகளுடன் 113 ரன் குவித்தார். அவர் கோலியுடன் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த விருத்திமான் சாகா 40, அமித் மிஸ்ரா 53 ரன்கள் எடுத்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் தேவந்திரா பிஷூ, கிரெய்க் பிராத் வெயிட் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 2-வது நாள் ஆட்டம் முடிவில் 16 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்தது. சந்திரிகா 16 ரன்னில் முகமது ஷமி ஆட்டமிழந்தார்.
இரட்டை சதம் அடித்தது குறித்து விராட் கோலி கூறும்போது, ‘‘இது மிகவும் சிறந்ததாக உணர்கிறேன். நான் கடந்த 2012-ல் இங்குதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானேன். அப்போது அது எனக்கு மறக்கமுடியாத தொடராக அமையவில்லை. மீண்டும் மேற்கிந்தியத் தீவுகளில் விளையாட வந்து இரட்டை சதம் அடித்தது திருப்தியாக உள்ளது’’ என்றார்.
நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. கிரெய்க் பிராத் வெயிட் 11, தேவேந்திரா பிஷூ ரன் எதும் எடுக்காத நிலையில் நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். 32 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் 1 விக்கெட் இழப்புக்கு 68 ரன் கள் எடுத்திருந்தது. கிரெய்க் பிராத் வெயிட் 35 ரன்னுடனும், தேவேந்திரா பிஷூ12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.